34கிளவியாக்கம்

போலப்   பெண்மைவிட்டு    ஆண்   அவாவும்பேடு ஆண்பால் என்றும்
அல்லது  அவாவுவது   பெண்பால்   என்றும்  கூறியிருப்பார். இனி உலக
வழக்கின்கண்    பேடிப்பயல்,    இவன்    ஒரு  பேடி  என வழங்குதல்
வெகுளிபற்றியும் இழித்தல் பற்றியுமாம். அவை ஒருவனை அவன்  ஒருமாடு,
அவன்   மாட்டுப்பயல்,    நரிப்பயல்        என்று    வழங்குதல்போல
ஒப்புணர்த்திவரும் குறிப்பென உணர்க.
   

இனித்   தெய்வம்  சுட்டிய  பெயர்கள்  ஈற்றிடைச்  சொல்லின்றிவாளா
வரும்வழி   அவை அஃறிணைச் சொல்லாயே நிற்கும்  என்பது (கிளவி-52)
பின்னர் விளக்கப்படும்.
   

சூ. 5 :

னஃகான் ஒற்றே ஆடூஉ வறிசொல்.
[5]
 

கருத்து :

ஆடூஉவறிசொல் ஆமாறு கூறுகின்றது.
  

உரை:னகர  ஒற்றினை   ஈறாகக்    கொண்டிசைப்பதுவே  ஆடூஉவை
அறிவிக்கும் சொல்லாகும்.
   

னஃகான் ஒற்றென்பது  அன்னும்  ஆனுமாகிய ஈற்று இடைச்சொற்களை
என்பது   வினையியலுள்   [சூ.8]    பெறப்படும்.    இவை  இறுதிக்கண்
நின்றிசைக்கும்    என்பதை    இவ்வியல் பத்தாம் சூத்திரத்தாற் கூறுவார்.
பின்வருவனவற்றிற்கும் இது பொருந்தும்.
   

எ.டு : உண்டனன்,   உண்ணாநின்றனன்,   உண்ணுவன்      எனவும்
உண்டான், உண்ணாநின்றான்,  உண்பான்   எனவும்   கரியன்,  கரியான்,
அகத்தன்,     பொன்னன்னன்   எனவும்  வரும்.  இவை  தெரிநிலையும்
குறிப்புமாக வந்த வினைமுற்றுக்கள்.
  

இனிப் பொன்னன், ஊரன், வேலன் எனப் பெயர் பற்றித்  தனித்துவரின்
அவை அஃறிணைக்கும் ஏற்ற விரிவுப்பெயராகலின்  பொன்னன்  வந்தான்,
ஊரன்   அவன்,    வேலன்   யாவன்  என முடிபு கொடுத்துக் காட்டுதல்
வேண்டும். இதனைத்,
   

"தோற்றந் தாமே வினையொடு வருமே"

[கிளவி-11]
 

என்றதனான்    உணர்க.   அச்சூத்திரத்துள்  "தாமே"   என்ற மிகையான்
உயர்திணைப் பெயரோடு வருதல் கொள்ளப்பட்டது.
  

இனி,   உரையாளர்  யாவரும்   ஆடூஉவறிசொல்லாவது னகர  ஒற்றை
இறுதியாக    உடைய    சொல்   என   உரை   கண்டனர்.  அவ்வுரை
ஆடூஉவறிசொல்லின்  இலக்கணங் கூறியதாகுமேயன்றி ஆடூஉவறிசொல்லை
ஆக்கும்  ஆறு இது  என்னும் ஆக்க இலக்கணம் கூறுவதாகாதென அறிக.
இவ்வியலுள் கிளவிகளை ஆக்கிக் கொள்ளும் முறைமை பற்றியே ஆசிரியர்
கூறுகின்றாராகலின் அவ்வுரையாவும் குன்றக் கூறலாம்.