கிளவியாக்கம்35

இனி  அன்,   ஆன்  என்னும்  னஃகான்   ஒற்றைக்கொண்டு ஆக்கிக்
கொள்ளுமாறு     யாங்ஙனம்     எனின்?   உண்,    செல்    முதலாய
தொழிற்சொற்களொடு    கால    இடைநிலைகளின்  பின்  அன்,   ஆன்
என்பவற்றைக்   கூட்டி   உண்டனன்,  உண்டான், சென்றனன், சென்றான்
எனவும்,  மலை, நாடு, அகம், வேனில்,  கண்,  கருமை,  செம்மை,  ஊண்
என்றாற் போல  வரும் பொருள் முதலாய பெயர்களொடு கூட்டி மலையன்,
நாடன், அகத்தன், வேனிலான், கண்ணன், கரியன், செய்யன், ஊணன்  என
ஆடூஉவறிசொல்லாக  ஆக்கிக்கொள்ளுதலாம்.   பின்வரும்   ஈறுகளுக்கும்
இஃதொக்கும்.
   

இங்ஙனம்   பாலறிகிளவிகளை   ஆக்கிக்கொள்ளுதற்கண்    திரிபின்றி
இருதிணை   ஐம்பாலுள்    ஒன்றை  அறிவிப்பதற்கு   ஏற்றது  படர்க்கை
வினைமுற்றேயாம். பிறவற்றைப் பிற சார்புகள் உணர்த்தும்.
   

இதற்கு,   வினைமுற்றுக்களை   மட்டுமே உதாரணமாகக்காட்டின் அன்,
ஆன் இறுதிகள் பெயர்க்கு ஈறாகா என்பது பட்டு
   

"வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்

பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்

மயங்கல் கூடா தம்மர பினவே"
 

என்பதனொடு  மாறுபடும் என்க. இனி அன், ஆன் எனக்கூறாமல் னஃகான்
ஒற்றே  என்று   கூறியதற்குக் காரணம், அகர ஆகாரங்கள் ஏனைய அள்,
ஆள், அர், ஆர் என்பவற்றிற்கும் பொதுப்படநிற்றலின்  என்க.  அதனான்
ஏகாரம் பிரிநிலையாம். தேற்றம் எனினும் ஒக்கும்.
   

இனிக்,   கோ,   வேள்,    குரிசில்,    நம்பி,  நங்கை முதலாயினவும்
ஆடூஉவறிசொல்  மகடூஉவறிசொற்களாயினும்   அவற்றின்   ஈறுகள்   பிற
முதனிலைகளொடு கூடி ஆடூஉவறிசொல் முதலாயினவற்றை ஆக்காமையின்
அவை வழக்கு நோக்கிய மரபாகக் கொள்ளப்பெறும் என்க.
   

உயர்திணைச்சொற்களின்  ஆக்கம்பற்றிய  இலக்கணம் அதிகாரமாகலின்
னஃகான்  ஒற்றே   ஆடூஉவறிசொல்   என்றாராயினும்   ஆடூஉவறிசொல்
னஃகான் ஒற்றென்பது கருத்து எனக் கொள்க.
   

சூ. 6 :

ளஃகான் ஒற்றே மகடூஉ வறிசொல்
[6]
 

க-து :

மகடூஉவறிசொல் ஆமாறு கூறுகின்றது.
 

உரை : ளகர ஒற்றினை  ஈறாகக்  கொண்டிசைப்பதுவே  மகடூஉவினை
அறிவிக்கும் சொல்லாம்.