| சூ. 35: | எப்பொரு ளாயினும் அல்ல தில்எனின் |
| அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல் |
(35) |
க-து: | செப்பின்கண் நிகழ்வதொரு வாய்பாடு பற்றிய மரபு கூறுகின்றது. |
| |
உரை: 'அல்லதில்' என்னும் வாய்பாட்டான் ஒருவன் செப்பு நிகழ்த்தலுறின், எவ்வகைப் பட்ட பொருளாயினும் வினாவப்பட்ட பொருளல்லாத பிறிதாகிய பொருட்கண் வைத்துக் கூறுக. |
எ-டு: பயறுளவோ? எனவினாவினாற்குப் பயறு இல்லையாயின் உழுந்தல்லதில் கொள்ளல்லதில் எனச் செப்புக. 'அல்லதில்' என்பது வாய்பாடாதலின். அல்லதில்லை, அன்றியில், அலாதில் அலாலில் என்றாற்போல அப்பொருள் பற்றிவரும் சொற்களெல்லாம் கொள்க. |
பிறிதுபொருள் என்பது பெரும்பான்மையும் இனப்பொருளைப் பற்றியதாகும். சிறுபான்மை இனப்பொருளின்றியும் வரும். பயறும் பாம்புணிக்கருங்கல்லும் விற்பானொருவனுழைச் சென்று பயறுளவோ? என்றவழிப் பாம்புணிக்கருங்கலல்லதில்' என்னு மன்றே? அதனான் இனப்பொருள் என்னாமல் எப்பொருளாயினும் என்றார் என்க. |
இனி, நூறுவிற்கும் பட்டாடையுளதோ? என வினாவினாற்கு ஐம்பதுவிற்கும் பட்டாடை அல்லதில் எனக்கூறினும், விலையால் வேறுபட்டமையின் அதுவும் பிறிது பொருளேயாம். |
இனி நச்சினார்க்கினியார் அல்லது என்பது அஃறிணை ஒருமைப்பாற்கு உரியதெனினும் மற்றையபாற்கண்ணும் மயங்கிவரும் என வழுவமைத்தார் என்றுகூறி "நாணும் நட்பும் இல்லோர்த் தேரின் யானல தில்லை இவ்வுலகத் தானே" (அகம். 268) என எடுத்துக் காட்டியுள்ளார். ஆண்டு "அல்லது" என்பது வினை எச்சப்பொருளில் வந்துள்ளமையை அவர் ஓராராயினார். உரையாசிரியர் விளக்கங்களுள் பல மிகையாக உள. |
சூ. 36: | அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல் |
(36) |
க-து: | மேற்கூறிய வாய்பாடுபற்றிய பிறிதொரு மரபு கூறுகின்றது. மேலதற் கொரு புறனடையெனினுமாம். |