62கிளவியாக்கம்

உரை:அல்லதில் எனச் செப்புவோன் பிறிதாகிய பொருளொடு கூறாமல்
வினாவப்பட்ட   பொருட்கண்   வைத்து   அவ்வாய்பாட்டாற்  கூறலுறின்
சுட்டிக்கூறுக.
  

எ-டு:பயறுளவோ? என்று வினாவியவழிப்  பசும்பயறல்லதில்,  பெரும்
பயறல்லதில்-கலம்பத்துவிற்கும் பயறலல்லதில் என அப்பொருட்டன்மையைச்
சுட்டிக்கூறுக   என்றவாறு.    சுட்டுதல்-கருதுதல்.   "சுட்டிக்கூறல்"  எனப்
பொதுப்படக் கூறியவதனான்  முற்கிடந்ததனைக்  காட்டி   இப்பயறல்லதில்
எனக்கூறினும், இது வல்லதில் எனக்கூறினும் ஒக்குமென்க.
  

சூ. 37:

பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் 

பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே  

(37)
  

க-து:

சுட்டுப்பெயராற்கூறுதல் வழாநிலையேயாம் என்கின்றது.
 

உரை:வரையறைபெறப்  பொருளொடு  புணர்ந்துவரும்  சுட்டல்லாமல்
பொருளொடு   புணராத   சுட்டுப்பெயராயினும்  செப்பினாற்கூறும்  வழிப்
பொருள் வேறுபடாது பொருந்தி நிற்கும்.
  

பொருளொடு புணர்ந்த சுட்டாவன: அப்பொருள், அவ்வீடு, இப்பொருள்,
இவ்வீடு, இம்மலர், இப்பயறு என வருவன. பொருளொடு புணராச்சுட்டாவன
அது இது அவை இவை எனப் பொதுவாய் வருவன.
 

"இதுவல்லதில்"   எனச்   செப்பியவழி  அச்சுட்டுப்பெயர் முன் கிடந்த
பொருளைக்  கண்கூடாகச்  சுட்டி  நிற்றலின்  வினாவியோன்   தெற்றென
உணருமாதலின் வேறுபடாது  ஒன்றாகும்   என்றார்.   சுட்டுப்  பெயரான்
விடைகூறுதல்  வினாயபொருட்கும்  பிறிது   பொருட்கும்  ஒக்கும்  என்க.
அதனால் இம்மரபை எடுத்துக் கூறினார்.
 

இனி,   வேறுபடாது   என்றொழியாது   "ஒன்றாகும்"   என  விதந்து
கூறியவதனான்.   முன்கிடந்த  பொருளேயன்றி அப்பொருட் கூறுகளையும்,
அடையாளங்களையும் சுட்டிக்கூறினும் அமையுமெனக் கொள்க.