66கிளவியாக்கம்

தொடர்மொழிக் கருத்துக்களைச் சுட்டி  வருதலின்.   'அதனான்'   என்பது
மூன்றனுருபேற்ற  சுட்டுப்பெயர்   அன்று   என்பது   விளங்கச்   "சுட்டு
முதலாகிய காரணக்கிளவி"  என்றார்.   அதனான்   என்பது   உருபேற்ற
சுட்டுப்பெயராயின்,    அஃது   ஒருமையைச்   சுட்டுதலின்றி   இங்ஙனம்
பலவற்றைச் சுட்டுதற்கு ஏலாதென்க.
 

இனிச் சாத்தன் வந்தான் அஃது   அரசற்குத்   துப்பாயிற்று.   கிழவன்
பிரிந்தான் அதனைக்கிழத்தி உணர்ந்திலள்   எனக்   காரணமல்லாத   பிற
தொடர் மொழிப் பொருளைச் சுட்டி  வருவன  சுட்டுப்பெயராகலின் அவை
சுட்டப்படும் பொருட்குப்பின் வருதலைத் "தன்னினம்  முடித்தல்"  என்னும்
உத்தியாற் கொள்க. சுட்டுப் பெயர்கள் மரபு பிறழ  வருதற்கு  ஏலாமையின்
எடுத்தோதிற்றிலர்.
 

சூ. 41:

சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் 

இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.  

(41)
 

க-து:

தொடர்மொழிக்கண் சிறப்புப்  பெயரும்   இயற்பெயரும்  நிற்கும்
முறைமை கூறுகின்றது. 
 

உரை: வினைக்கொருங்கு இயலுமிடத்துச் சிறப்பினான் ஒருவற்கு ஆகிய
பெயர்ச் சொற்கும் பிறவகையான்  எய்திய  பெயர்ச்   சொற்கும்   முற்பட
இயற்பெயர்ச் சொல்லைக் கிளவார் புலவர்.  பிற்படக்கிளப்பார்  என்றவாறு.
சிறப்பினாகிய பெயர்   அரசர்  முதலானோரான் தரப்படுவது. கல்வி, தவம்
முதலிய பிறவகையான் வரும் பெயர் எய்தப்படுவது.  பிறவகையான்  வரும்
பெயர் என்பது உம்மையாற் கொள்ளப்பட்டது.
 

எ-டு:ஏனாதி நல்லுதடன் வந்தான்.  காவிதி   கண்ணந்தை   வந்தான்
எனவரும். இவை சிறப்புப் பெயர். ஒருவினை  கொள்ளாத  வழி  உம்மைத்
தொகையாதற்கும்  ஏற்றலின்  வினைக்கொருங்கியலுதல்  தந்துரைக்கப்பட்ட
தென்க. முனிவன் அகத்தியன் வந்தான்.ஆசிரியன் பேரூர்க்கிழான் வந்தான்.
சோழன்  நலங்கிள்ளி வென்றான். கொல்லன் மருதன் சென்றான் எனவரும்.
இவை பிறவகையான் எய்திய பெயர்களாம்.
 

இவை, அகத்திய முனிவன், பேரூர்க்கிழான்   ஆசிரியன்,  நலங்கிள்ளிச்
சோழன் எனப் பிற்கிளக்கப்படினும்  இழுக்கின்மை  நோக்கி   உம்மையான்
தழுவிக் கொண்டார் என உணர்க.