கிளவியாக்கம்69

யானும் என்குதிரையும் அவனும் சாறும் எனவருமிடத்து   உயர்திணைக்கே
உரிய தன்மைப்பன்மைவினை   அஃறிணையை   உளப்படுத்தி   அதற்கும்
முடிபாதலை நோக்கி வினைபற்றிய  வழுவமைப்பாராய்த் "திரிபவை  உள"
என்றார். அச்சூத்திரம்   வினைச்சொல்லைப்பற்றிய   விதியாகும்.   ஈண்டு
இருதிணைப் பெயர்கள் விராய்வந்து இவ்வாறு முடியும்   என்றது   பெயர்
பற்றியவிதியாம்.   அன்றியும்   ஈண்டு   முடிக்கும்   சொல்   தெரிநிலை
வினையாகவோ     குறிப்பு     வினையாகவோ      அமையலாமாதலின்
அச்சூத்திரத்தான் இவ்விதி உய்த்துணர்தற்காகாமையறிக.
 

சூ. 44:

ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல் 

ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லா 

(44)
 

க-து:

எண்ணான் வருபெயர்பற்றியதொரு மரபு கூறுகின்றது. 
 

உரை:உயர்திணை ஒருமை  சுட்டிவரும்  எண்ணுப்பெயர்   மூன்றனுள்
இருபாற்கும் பொதுவாகாமல் ஒருபாலுக்குரியதாய்ப்  பிரிந்துவரும்  ஒருவன்
ஒருத்தி என்னும் சொற்கள்   ஒருமைக்கு   அல்லது   இருமை   முதலிய
எண்ணுமுறைக்கண் நில்லா.
 

நில்லாது  எனப்பாடங்கொண்டு   பொதுப்பிரிபாற்   சொல்   என்னும்
ஒற்றுமையான்    "நில்லாது"    என   ஒருமையாற்   கூறினார்   என்ப
உரையாசிரியன்மார். பாற்சொல் என்றது பாலுணர்த்தும் ஈறுகளை.
 

எ-டு: ஒருவன்-ஒருத்தி எனவரும். இருவன் மூவன்;   இருத்தி   முத்தி
எனவாரா.
 

"பொதுப்பிரி   பாற்சொல்     எண்ணுமுறை   நில்லா"   என்றதனாற்
பொதுப்பிரியாத   ஒருவர்   என்னும்சொல்   இருவர்,   மூவர்,   நால்வர்
எனவருதல் பெறப்படும்.
 

"மகன், மகள்   என்னும்   பொதுப்பிரிபாற்   சொற்களை   நீக்குதற்கு
ஒருமை எண்ணின் என்றும் ஒருவர் ஒன்று என்னும் எண்ணுப்  பெயர்களை
நீக்குதற்குப்     பொதுப்பிரிபாற்சொல்   என்றும்   கூறினார்."   என்னும்
சேனாவரையர் உரைநயம் போற்றற்பாலது.
 

அவ்வாறாயின் பவணந்தியாரைப் போல "ஒருவன் ஒருத்தி பெயர் மேல்
எண்ணில" எனச்சுருங்கக் கூறியிருக்கலாமே எனின்?