சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

111

ஆனீற்று அளபெடைப்பெயர் விளி யேற்குமாறு
 

138.

அளபெடைப் பெயரே அளபெடை இயல.
 

என் - எனின், எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

(இ - ள்.) ஆனீற்று  அளபெடைப்  பெயர்  1மேற்கூறிய இகரவீற்று
அளபெடைப் பெயர்போல இயல்பாய் விளியேற்கும், (எ - று.)

(எ - டு.)அழாஅஅன், புழாஅஅன் என வரும்.

மற்று    இஃது ‘ஆனென்  இறுதி  இயற்கை யாகும்’  என்றவழியே
அடங்காதோ   எனின்  அளபெடுத்த  ஆனென்  இறுதியாகலின்  வேறு
கூறிற்றுப்போலும்.                                          (18)

னகார ஈற்று முறைப்பெயர் விளி ஏற்குமாறு
 

139.

முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே.
 

என் - எனின், இதுவும் எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

(இ - ள்.) னகார  ஈற்று  முறைப்பெயராகிய  சொல், ஏகாரம் பெற்று
விளியேற்கும், (எ - று.)

(எ - டு.) மகன் - மகனே, மருமகன் - மருமகனே எனவரும்.

மற்று  இது  விரவுப்பெயரன்றோ  எனின்,  2 மேல்  ஐகார வீற்றுள்
கூறியவாறே கூறுக.                                        (19)

னகார ஈற்றுள் விளி ஏலாதன
 

140.

தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும்
யானென் பெயரும் வினாவின் பெயரும்
அன்றி அனைத்தும் விளிகோள் இலவே.
 

என் -  எனின்,  னகார  வீற்றுள்  விளி ஏற்பன எல்லாம் உணர்த்தி
இனி விளிஏலாதன கூறுகின்றது.

(இ - ள்.)  தான்  என்னும்  ஆனீற்றுப்   பெயரும்  சுட்டெழுத்தை
முதலாகவுடைய   அன்னீற்றுப்  பெயர்களும்   யான்,   யாவன்  என்ற
அவ்வனைத்ததுப்பெயர்களும்   மேற்கூறியவாற்றா னாயினும்  பிறவாற்றா
னாயினும் விளிகோடல் இல, (எ - று.)


1.128 ஆம் நூற்பா. 2.129 ஆம் நூற்பா உரை.