லகார ளகார ஈற்றுப் பெயர்கள் விளி ஏற்குமாறு |
147. | எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும். |
என் - எனின், நிறுத்த முறையானே லகார ஈறும் ளகார ஈறும் விளியேற்குமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.)லகார ளகாரம் என எஞ்சிய இரண்டெழுத்தினையும் இறுதியாகவுடைய பெயர்கள் ஈற்றினின்ற எழுத்திற்கு அயலெழுத்து நீண்டு விளியேற்றல் வேண்டும், (எ - று.) (எ - டு.) குரிசில் - குரிசீல், தோன்றல் - தோன்றால், மக்கள் - மக்காள் எனவரும். (27) எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் |
148. | அயல்நெடி தாயின் இயற்கை யாகும். |
என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ - ள்.) அவ்விரண்டு ஈற்றுப்பெயரும் ஈற்றயலெழுத்து நீண்ட நிலைமையவாயின் இயல்பாய் விளியேற்கும், (எ - று.) (எ - டு.) ஆண்பால், பெண்பால், ஏமாள், கோமாள் எனவரும். (28) இதுவுமது |
149. | வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் ஆள்என் இறுதி ஆயா கும்மே விளிவயி னான. |
என் - எனின், அவ்விரண்டீற்றுள் ளகார ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ- ள்.) வினையினானும், பண்பினானும் ஆராயத் தோன்றும் ஆள் என்னும் இறுதி விளிக்குமிடத்து ஆயாய் விளியேற்கும், (எ -று.) (எ - டு.) உண்டாள் - உண்டாய் எனவும், கரியாள் - கரியாள் எனவும் வரும். (29) இதுவுமது |
150. | முறைபெயர்க் கிளவி முறைப்பெய ரியல. |