சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

141

பெண்மகன் என்னும் சொற்குமுடிபு கூறல்
 
  

197.

மகடூஉ மருங்கில் 1பால்திரி கிளவி
மகடூஉ இயற்கை தொழில்வயி னான.
 

என் - எனின்,    இதுவும்    உயர்திணையொழிபு    உணர்த்துதல்
நுதலிற்று.  

(இ - ள்.)  பெண்பாற்குரிய  ஈற்றதாய்  நில்லாப்  பெண்மகனெனப்
பெண்பால்  ஆண்பாலாகத்  திரிந்து   நின்ற  சொல்சொற்கு   முடிபாக
அதன்    தொழில்    கூறுமிடத்து   அப்பெண்பாற்  பொருண்மையின்
இயல்பிற்று, (எ - று.)  

(எ - டு.) பெண்மகள் வந்தாள் எனவரும்.  

இதுவும்  ஓர்  மரபு  வழுவமைதி  எனக்  கொள்க.  இதுவும்   அந்
நீர்மைத்தாகலின் ஈண்டுப் போந்தது எனக்கொள்க.              (40)

செய்யுட்கண் வரும் ஆகார ஈறு ஓகாரம் ஆதல்
 
   

198.

ஆஓ ஆகும் பெயருமா ருளவே
ஆயிடன் அறிதல் செய்யு ளுள்ளே.
 

என் - எனின்,    இது   பெயரீறு   செய்யுளுள்  திரியும்   என்பது
உணர்த்துதல் நுதலிற்று.  

(இ - ள்.)  ஆகாரம்    ஓகாரமாகி    நிற்கும்   பெயரும்    உள.
அவ்விடங்களை அறிக செய்யுளிடத்து, (எ - று.)  

(எ - டு.) வில்லோன்   காலன   கழலே  எனவும்,   தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே எனவும் வரும்.  

ஆயிடனறிதல் என்றதனால் ஆகாரமாதற்கு ஏலாத வழியே  ஓகாரம்
ஆவது இயல்பு எனக் கொள்க.  

இனிக்  கிழவோன்   என்பது  ஆகாரமாக  வழக்கின்மையின்  அது
செய்யுள் விகாரம் அன்று ; இயல்பாகிய ஈறு எனக் கொள்க.  

இதுவும் செய்யுள் மரபு வழுவமைதி எனக் கொள்க,           (41)

விரவுப் பெயர் செய்யுளுள் வரும் முறைமை
   

199.

இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா
நிலத்துவழி மருங்கில் தோன்ற லான.
 

1.‘பால் தெரி’ என்பதும் பாடம்.