சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

159

ஈண்டு  அவற்றிற்கு  இடம்  வரையறுத்தவாறாகக்  கொள்க. இக்கடாவும்
விடையும்  உயர்திணைப்படர்க்கை  வினைக்கும் ஒக்கும் எனக் கொள்க.

அவற்றுள்  பாலுணர்த்தும்  என்ற  னகரவீறு    தனித்தன்மைக்கண்
என்னென்புழி   இருபாற்கும்  பொதுவாய் நின்றதால் எனின், ஆண்டும்
ஒருமையு   மென்னுந்   துணையும்    உணர்த்தியது  எனக்  கொள்க.
அக்குறைபாடுகளான்   அன்றே    அவ்வெழுத்துப்   பதினொன்றற்கும்
படர்க்கைவினை  யென  இடம்  வரையறுத்ததெனக் கொள்க.     (19)

அஃறிணை வினைமுற்றின் தொகை
 
  

220.

பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே.
 

என் - எனின்,  மேல்  விரித்தனவற்றை எல்லாம் தொகுத்து, இன்ன
திணைக்குரிய என்பது உணர்த்துதல் நுதலிற்று.  

(இ - ள்.) பன்மையும்   ஒருமையும் ஆகிய பால்களை யறிய வந்த
அவ்ஆறும் அஃறிணையுடையன, (எ - று.)  

ஆறாவன, அகர   ஆகார  வக்ரங்களும்,  தகர  றகர  டகரங்களை
யூர்ந்த குற்றியலுகரம் மூன்றும் எனக் கொள்க.  

ஒன்றென  முடித்தலென்பதனான்   இவ்வீறு   பெயர்க்கும்  ஈறாதல்
கொள்க.                                                (20)

எவன் என்பது அஃறிணை இருபாற்கும் உரித்து எனல்
 
  

221.

அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவனென் வினாவே.
 

என் - எனின்,  அஃறிணைத்  தெரிநிலை  வினை உணர்த்தி, அதன்
வினைக்குறிப்புக்       கூறுவான்       இருபாற்கும்      உரியதோர்
குறிப்புணர்த்துகின்றாரென்பது.   

(இ - ள்.)   மேற்சொல்லப்பட்ட   அஃறிணையிடத்து    ஒருமை
பன்மையாகிய  இருபாற் பொருண்மைக்கு மிகுதி குறைவின்றி யொக்கும்
என்று   சொல்லுவர்   ஆசிரியர்;  அது   யாது  எனில்  எவனென்று
சொல்லப்படும் வினாப்பொருண்மையுடைய சொல்லினை,

(எ - டு.) எவன் அது, எவன் அவை. 

இதனை     மேற் கூறுகின்ற வினைக்குறிப்பொடு கூறாதது  என்னை
யெனின்,  இஃது  ஈறுதிரியாது இருபாற்கும் ஏற்பது ஒன்றாகலின்  வேறு
கூறினார் என்பது.