சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

162

இவைதம்மைச் சேரவைத்து ஓதானாயது செய்யுள்நோக்கிப்போலும்.

ஒப்புமைப்     பண்புப்பெயர்      ‘ஒப்பினானும்’     என்பதனால்
கொள்ளப்பட்டது.

சினைப்பெயர்   ‘பண்பினாகிய  சினைமுதற்  பெயரும்’  என்பதனால்
கொள்ளப்பட்டது.

இனியிவண்     ஈண்டுக்கூறாதன    இடப்பெயரும்   காலப்பெயரும்
தொழிற்பெயரும்    என    மூன்றுமே;     அவற்றை     உயர்திணை
வினைக்குறிப்பு  ஓதியவழி  1 ‘அன்னபிறவும்’   என்று  வைத்து, அதன்
பின்னர்ச்      சூத்திரத்தும்2     ‘அன்னமரபின்’     என்றோதினதால்
கொள்ளப்படுமென்    றுணர்க.    வடாதுவேங்கடம்,    மூவாட்டையது,
செலவிற்று  எனவரும். இவற்றின் உதாரண  வாய்பாட்டு  விகற்பங்களும்
அறிந்துகொள்க.

இதன்     பொருட்பெயர்   முதல்   அறுவகைப்பெயரினும்  வரும்
வரவினைத் தொகுத்தானும், விரித்தானும் ஓதாது,  சிலவற்றை  விரித்தும்,
சிலவற்றைத்   தொகுத்தும்,    சிலவற்றைக்  கூறாதும் ‘அப்பாற்பத்தும்
குறிப்பு’
   என்று    விட்ட    கருத்து   என்னை   எனின்,  இவை
பெரும்பான்மையன   என்றவாறு.  பிறிது  காரணம்   உண்டாயினும்
அறிந்திலம்.
                                             (22)

அஃறிணை வினைக்குறிப்பிற்குரிய ஈறு
 

223. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.
 

என்  -   எனின்,   மேற்கூறிய  வினைக்குறிப்பிற்கு  ஈறு  ஆமாறு
உணர்ந்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  பின்மையும்  ஒருமையுமான  பால்களை   அறிய  வந்த
அத்தன்மைத்தான  மரபினையுடைய  காலம்  குறிப்பாய்வரும்  வினைச்
சொற்கள், அஃறிணையிடத்து  மேற்கூறிய  தெரிநிலைவினை ஈறுகளோடு
ஈறு வேறுபாடில, (எ - று.)

3 மேற்கூறிய    அறுவகை ஈற்றுள் டகரவுகரம் ஈண்டு  மாட்டேற்றிற்
கேலாமையின்  ஆண்டே  கூறப்பட்டது.  அஃது  ஒழிந்து  ஐந்து ஈறும்
மேல் எடுத்தோத்தானும் இலேசானும் வந்தவற்றிற்கு   ஈறாயவாறு  கண்டு
கொள்க.


1. வினையியல்-16 ஆம் நூற்பா.

2. வினையியல்-17 ஆம் நூற்பா

3. வினையியல்-16 ஆம் நூற்பா