(இ - ள்.) முன்னிலையிடத்தினைத் தனக்குப்பொருண்மையாக உணர்த்துஞ் சொல்லும், ஏவலைத் தனக்குப் பொருண்மையாகக் கொண்ட சொல்லும், வினைச்சொல்லை ஒழிபாகவுடைய சொல்லும் இன்மை என்னும் பண்பினை உணர்த்துதலுடைய சொல்லும், வேறு என்னும் சொல்லும், செய்ம்மன என்னும் சொல்லும், செய்யும் என்னும் சொல்லும், செய்த என்னும் சொல்லும் என்று சொல்லப்படுகின்ற அவ்வடைவின்கண் நின்ற அவ்வெட்டுச்சொல்லும் ஒருகால் உயர்திணைக்கண்ணும், ஒருகால் அஃறிணைக்கண்ணும் பொதுமையிற் றிரிந்து வேறுபட்டு நிற்கும் தொழிலினையுடை யவாகிய இருதிணையாகிய பொருட்கும் ஒன்று போன்ற உரிமையுடைய, (எ - று.) முன்னிலை யென்பது முன் உயர்திணைக்கண்ணும், அஃறிணைக்கண்ணும் தன்மையும் படர்க்கையும் கூறிய இடங்களுள் கூறாதுநின்றது ஆகலானும், தான் பல ஈற்றால் பயின்று வருவதாகிய வழக்குப்பயிற்சி யுடைமையானும், முற்றுச்சொல்லாதலானும் முன்வைக்கப்பட்டது. இனி, அதன்பின்னர் வியங்கோள் முற்றுச்சொல்லுமாய்ப் பெரும் பான்மை வரவு படர்க்கை என ஓரிடமாய்ப் பலவழக்கிற்று ஆகலான் வைக்கப்பட்டது. இவை இரண்டும் அவற்றுப் பொருண்மையால் பலவீற்றை ஒன்றாக அடக்கப்பட்டன. அவற்றின் பின்னர் அவைபோல வழக்குப்பயிற்சி யுடைமையான் வினையெச்சம் வைக்கப்பட்டது. இஃது அச்சொல்லும் முடிபிலக்கணத்தான் ஒன்றாக அடக்கி ஓதப்பட்டது. இன்மை செப்பலும், வேறேன் கிளவியும் முன்னிலையும் வியங்கோளும் போல முற்றே யெனினும் வினையெல்லாம் பாலாது சிறுவரவின ஆகலானும், வினைக்குறிப்பின் பன்மையானும் வினையெச்சத்தின் பின்வைக்கப்பட்டன. அவற்றின் பின்னர்ச் செய்ம்மன என்பது தெரிநிலைமுற்றே எனினும் பலவாய்பாட்டதாயினும் வழங்குவாரின்மையின் பின் வைக்கப்பட்டது. அதன் பின்னர் செய்யும் என்பது ஒருவழி முற்றாம் நிலைமையும் உடைத்தாகலின் அதன்பின் வைக்கப்பட்டது. அதன் பின்னர் அதனோடு ஒத்த பெயரெச்சம் ஆகலின் செய்த என்பது வைக்கப்பட்டது. இன்மை செப்பல் முதல் ஐந்தும் அச்சொற்கள் தம்மையே ஓதின எனினும் வேறு எனப்தொன்றும் ஒழிய மற்றையன எல்லாம் பல வாய்பாட்டன என்று கொள்க. அஃதென்னையாமாறு எனின், இல்லை என்னாது இன்மை செப்பல் என்றதனால், இல்லை என்பதும் இல் என்பதும் என இரண்டாயிற்று. செய்ம்மன, செய்யும், செய்த என்பன உண்மன, தின்மன எனவும்; உண்ணும் தின்னும் எனவும், உண்ட தின்ற எனவும், பல வாய்பாட்ட வாயின. |