என் - எனின் மேல் அஃறிணையென்றார்; அதனை இனைத்துப் பால்படுமென்று, அது படும் பால்விரித்தல் நுதலிற்று. (இ - ள்) ஒன்றனை யறியுஞ் சொல்லும், பலவற்றை யறியுஞ் சொல்லுமென்று சொல்லப்பட்ட அவ்விரண்டு பாலினையுமுணர்த்துஞ்சொல் அஃறிணையன (எ - று.) இதனாற் சொல்லியது மேற்கூறிநின்ற அஃறிணைப் பொருளினையும், அஃறிணைச் சொல்லினையும் விரிவகையான் ஒருமை பன்மை யெனவும், ஒருமைச்சொல் பன்மைச்சொல் எனவும் இரண்டு கூறுபடும் என்பதூஉம் கூறியவாறாயிற்று. (3) பேடியும் தெய்வமும் உயர்திணைக்கண் அடங்கும் எனல் |
என் - எனின் ஐயமறுத்தலை நுதலிற்று; என்னை? மேற்றொகையுள், ஒழிந்த, தேவரும், நரகரும், மன்பதையு ளொழிந்த பேடியும் எவ்வாறாங் கொல் என்று ஐயுற்றற்கு அவையும் இவ்வாறாம் என்கின்றமையின். (இ - ள்.) உயர்திணையிடத்துப் பெண்மைத் தன்மையை யெய்த வேண்டி, ஆண்மைத் தன்மையி னீங்கிய பேடியென்னும் பொருளும், தெய்வத் தன்மையைக் கருதின தெய்வமென்னும் பொருளும் இவை யிரண்டும், இவையெனத் தம்மை வேறு பாலறி விக்கும் ஈற்றெழுத்தினையுடைய சொற்களை யுடையவல்ல; மேற் கூறிய மக்களென்னும் உயர்திணையிடத்து முப்பாலினையும் உணர்த்துஞ் சொற்கள் அவ்விடத்தினின்று நீங்கி வந்து தம்மை யுணர்த்தும் (எ - று.) (எ - டு.) பேடி வந்தாள், பேடியர் வந்தார், வாசுதேவன் வந்தான், திருவினாள் வந்தாள், முப்பத்துமூவரும் வந்தார், சந்திராதித்தர் வந்தார் எனினும் அமையும். அந்தந் தமக்கிலவே என்றதனான், மக்களும் தேவருமல்லாத நிரயப் பாலரும் மக்களை யுணர்த்தும் முப்பாற் சொல்லானுஞ் சொல்லப்படுவ ரென்பது கொள்க. (எ - டு.) நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார் எனவரும். |