சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

16

(எ - டு.)  யான்   உண்டாய்,  யான்  உண்டான்  என்பன,  பெயர்
வினைகளைப்   பற்றி    வரும்   விகற்பம்  இவற்றிற்கு  மொக்குமென
உணர்க.

காலவழூஉ : இறந்தகாலம்,  நிகழ்காலம்,  எதிர்காலம் என்ற மூன்றும்
ஒன்று இரண்டனோடு மயங்கி மூவிரண்டாறாம்.

(எ - டு.) செத்தானைச்  சாகின்றான்   எனவும்,  சாவான்  எனவுங்
கூறினாற்போல  வருவன.  இவையிற்றிற்கும்  பெயர் வினைகளைப் பற்றி
வரும் விகற்பங் கொள்க.

மரபுவழூஉ  :  ஒரு   பொருட்குரிய   மரபினை   ஒரு  பொருட்கு
உரித்தாகச் சொல்லுதலாம்.

(எ - டு.) யானை    மேய்ப்பானை     இடையனென்றும்,    ஆடு
மேய்ப்பானைப்  பாகனென்றும்,  யானையுட்  பெண்ணை  ஆ  என்றும்,
ஆவினுட் பெண்ணைப் பிடி என்றும் கூறினாற் போல்வன.

செப்பு வழுவிற்கும்  வினாவழுவிற்கும்  உதாரணம்  மேல் வருகின்ற
‘செப்பும் வினாவும்’ என்னுஞ் சூத்திரத்தாற் கொள்ளப்படும்.

எழுவகை  வழுவும்  இச்சூத்திரத்துள்  ‘மயங்கல்கூடா’   என்றதனாற்
பெறுது  மெனின்,  மேல் “செப்பு வினாவும் வழா அ  லோம்பல்” எனச்
செப்புவழுவும், வினாவழுவும் கூறலமையாதெனின்,  இதனுள்  அடங்கின
வற்றையே     உலகத்துச்     சொல்லெல்லாம்     உயர்திணைச்சொல்
அஃறிணைச்   சொல்   என   வரையறையுற்றாற்வோல்  வினாவுரையும்
செப்புரையுமென  இரண்டாக   வரையறைப்படுத்து  ஓர் நிலைமைகண்டு
அதனை  உணர்த்துதற்  பொருட்டு  மீட்டும்  விளங்கக்  கூறினாரென்று
சொல்லுப.   எழுவகை   வழுவிற்கும்   இஃதோர்   பொதுவிதி  கூறிய
தெனவும், சிறப்பு விதி வேறு வேறு கூறிற்றெனவும் உரைக்கப்படும்.

செப்புவினா  ஒழிந்தவற்றிற்குச்     சிறப்புவிதி      யாதோவெனின்
வினையியலுட்   கடைக்கண்   காலவழுவிற்கு    விதிபெறுதும்.    மரபு
வழுவிற்கு  விதி பொருளதிகாரத்து  மரபியலென்னும்  ஒத்திடைக் கண்டு
கொள்ளப்பெறுதும். ஒழிந்த  திணைபாலிடங்கட்குவிதி  ‘னஃகா னொற்று’
முதலிய  சூத்திரங்களாற்  கூறிற்றென வுணர்க.  இவ்வாறு  நூனயமாதல்
இச்சூத்திரத் துரையினுட் கண்டு கொள்க.

இவ்வதிகாரத்துக்   கூறப்படும் விதி மாணாக்கன் ஒரு பொருளினைக்
கூறுந்திறன்   அறியாது  இடர்ப்படுதல்  நோக்கி   இன்ன   பொருளை
இன்னவாறு   கூறுக  என்று   அதனிலக்கணம்   கூறுதலும்,   அதனை
அவ்வாறொழியவுங்  கூறுதலும் ஆம்  என்று  கருதினும் கருதற்க என்று
அதனை  வழுவற்க  என்று  காத்தலும்,  அவ்வாறு  வழுப்படப்  கூறிய
வழக்கினுட்  சிலவற்றை  அதனகத்து அவ்வாறு  கூறுதற்கோர்  பொருட்
காரணங்   கண்டாதல்  அமைதி  கூறுதலுமென   மூவகை.   அவற்றுள்
இச்சூத்திரம் வழுவற்க என்னும் விதி கூறிற்றென வுணர்க.          (11)