என் - எனின் செப்புவானொடு வினாவுவானிடைக் கிடந்ததோர் மரபிலக்கணங் கூறுதல் நுதலிற்று. (இ - ள்) செப்பின்கண்ணும் வினாவின்கண்ணும் சினைக் கிளவிக்கும், முதற்கிளவிக்கும் அவ்வப்பொருளுக்கு அவ்வப் பொருளேயாம்; ஒன்றனோடொன்றைப் பொருவிக் கூறுமள விற்றாகிய பொருள், (எ - று.) (எ - டு.) கொற்றன் மயிர்நல்லவோ சாத்தன்மயிர் நல்லவோ என வினாவினவிடத்துக் கொற்றன்மயிரிற் சாத்தன்மயிர் நல்ல, சாத்தன் மயிரிற் கொற்றன்மயிர் நல்ல என்று இறுக்க. பிறவுமன்ன, இது சினைக் கிளவி. கொற்றனல்லனோ சாத்தனல்லனோ என வினாவின விடத்துச் சாத்தனிற் கொற்றன் நல்லன், கொற்றனிற் சாத்தன் நல்லன் என இறுக்க. இது முதற்கிளவி. சினையென்பது உறுப்பு. முதலென்பது அவ்வுறுப்பினை யுடையது. அப்பொருளாகு மென்றதற்குப் பொருள் சினைக்குச் சினையும், முதற்கு முதலும் என்பதன்றி அவ்வச்சினைக்கு அவ்வச்சினையும் அவ்வம் முதற்கு அவ்வம் முதலென்பது கொள்ளப்படும். சினை முற்கூறியவதனான் அவ்வச் சினைக்கு அவ்வச் சினை கூறாது முதலொடு கூறுதலும் உள என்பது கொள்ளப்படும். (எ - டு.) இவள் கண் நல்லவோ கயல் நல்லவோ என வரும். உறழ்பொருளென்னாது துணையென் றவதனால் உவமத்துக் கண்ணுஞ் சினைமுதல்கள் தம்மின் மயங்காமற் கூறுக என்பது கொள்ளப்படும். இன்னும் அதனானே அச் சினைமுதற்பொருள்களை யெண்ணுமிடத்தும் இனமொத்தனவே எண்ணுக என்பதூஉங் கொள்ளப்படும். உவமம், வினை பயன் மெய் உரு என நான்கு வகைப்படும். (எ - டு.) புலி பாய்ந்தாங்குப் பாய்ந்தான், மழைவண்கை, துடி போலும் இடை, பொன்போலு மேனி எனவரும். |