என் - எனின் மரபு வழீஇ யமையுமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) தகுதியினையும் வழக்கினையும் பொருந்தி நடக்கு மிலக்கணத்திற் பக்கச்சொல் நீக்கு நிலைமையுடைய அல்ல, (எ - று). தகுதியென்பது மங்கல மரபினாற் கூறுதலும், இடக்கரடக்கிக் கூறுதலும், குழுவின்வந்த குறுநில வழக்கும் என மூன்று கூறுபடும். (எ - டு.) செத்தாரைத் துஞ்சினார் என்றலும், ஓலையைத் திருமுகம் என்றலும் மங்கலமரபு. கண்கழீஇ வருதும், கான்மேனீர் பெய்துவருதும், கைகுறியராயிருந்தார், பொறையுயிர்த்தார், புலிநின்றிறந்த நீரலீரத்து, கருமுகமந்தி செம்பினேற்றை என்பன இடக்கரடக்கில் கூறல், பொற்கொல்லர் பொன்னைப் பறியென்றலும், வண்ணக்கர் காணத்தை நீல மென்றலும், யானைப்பாகர் ஆடையைக் காரை என்றலும் குழுவின்வந்த குறுநில வழக்கு. வழக்காறு இலக்கணத்தொடு பொருத்திய மரூஉ வழக்கும், மரூஉ வழக்கும் என இருவகைப்படும். (எ - டு.) முன்றில், மீகண் என்பன இலக்கணத்தொடு பொருந்திய மரூஉவழக்கு. அருமருந்தன்னானை அருமருந்தன் என்றலும், நட்டுவியந்தானைக் நட்டுயந்தானென்றலும், பொதுவில் என்பதனைப் பொதியில் என்றலும், மலயமான் நாட்டை மலாடு என்றலும், சோழநாட்டைச் சோணாடு என்றலும் என இவை மரூஉவழக்கு. இவ்வாறு சொற்சிதையச் சொல்லுவனவன்றிப் படுபொருள் சிதையச் சொல்லுவனவும் மரூஉவழக்கு என்று கொள்ளப்படும். கரிய மயிரினைச் சிறு வெள்வாய் என்றும், களமருட் கரியாரை வெண்களமர் |