என்றும், புலைக்களமருட் செய்யாரைக் கருங்களமர் என்றும், நீரினையும் பாலினையும் ஒரோவழிச் சிலபல வென்றும், அடுப்பின் கீழ்ப்புடையை மீயடுப்பு என்றுங் கூறுவன. இலக்கணவாய்பாடின்றி மருவிய வாய்பாடும் தாமே இலக்கணமாகக் கூறுவன இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ எனப்படும். இலக்கண வாய்பாடும் உள்வழிச் சொற்சிதையவும் வருவன மரூஉ வழக்கு எனப்படும். தகுதியென்பது பட்டாங்குச் சொல்லுதல் நீர்மையின்மை நோக்கி அவ்வாய்பாடுகளைந்து இவ்வாறு சொல்லுதும் என்று உடம்பட்டுச் சொல்லி வருவது. வழக்காறென்பது வழங்கற்பாடே மேற்கொண்டு ஒருகாரணம் நோக்காது வாய்பாடு பகுத்துப், பயிலச் சொல்லி வருவது. இச்சூத்திரத்தாற் சொல்லியது பரந்து பட்ட மரபு வழூஉக்களுள் சிலவற்றைப் பொருட்காரணம் பற்றியும், நன்மக்கள் தாம் பயிலவழங்குத லாகிய காரண வழக்குப்பற்றியும் வழுவமைத்தவாறு என வுணர்க. இவற்றுள் தகுதியென்றது பொருள்பற்றி யமைந்தது. வழக்காறு வழங்குதல்பற்றி யமைந்தது. யானை, யாறு, யாடு என்னும் இன்னோரன்ன வற்றை ஆனை, ஆறு, ஆடு என்னும் இன்னோரன்னவாகக் கூறுதலும் வழக்காறென இதனுட் கொள்ளப்படும். பிறவுமன்ன. அவை சான்றோர் சொன்ன செய்யுளுட் பெரும்பான்மை காணப்படாமையின் இதனுட் கொள்ளாது ‘கடிசொல் லில்லை காலத்துப் படினே’ (எச்ச-50) யென்புழிக் கொள்ளப்படும். (17) இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர் செய்யுட்கே எனல் |