சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

25

மேலதற்கோர் புறனடை
 

21.

ஆக்கந் தானே காரண முதற்றே.
 

என் - எனின் மேலதற்கோர் புறனடையுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  மேற்கூறிய  ஆக்கச்  சொற்றானே  காரணச்  சொல்லை
முன்னாகவுடைத்து (எ - று.)

(எ - டு.) கடுவுங்    கைபிழியெண்ணெயும்   பெற்றமையான்  மயிர்
நல்லவாயின,  எருப்பெய்து   இளங்களை  கட்டு நீர் கால்யாத்தமையாற்
பைங்கூழ் நல்லவாயின எனவரும்.

ஆக்கம்   முற்கூறிக்    காரணம்    பிற்கூறியும்    வருமாலெனின்
பெரும்பான்மையும்  முற்கூறிக் கூறப்படுதலின்  முதற்று என்றார்போலும்.
இனி முதல் என்பதனைக் காரணமாக்கிக் கூறுதலுமொன்று.        (21)

எய்தியது விலக்கல்
 

22.

ஆக்கக் கிளவி காரணம் இன்றியும்
போக்கின் றென்ப வழக்கி னுள்ளே.
 
  

என் - எனின் எய்தியது விலக்குதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்கூறிய  ஆக்கச்  சொற்றான்  காரணத்தை யொழியச்
சொல்லுதலுங்      குற்றமில்லையென்று      சொல்லுப     ஆசிரியர்
வழக்கினிடத்து  என்றவாறு.   உம்மை   யெதிர்மறையாகலான் காரணம்
கொடுத்துக் கூறல் வலியுடைத்து.

(எ - டு.) மயிர் நல்லவாயின, பைங்கூழ் நல்லவாயின எனவரும்.

செய்யுள்  விதியுள்வழிச்   செய்யுளென்று   கூறி, வாளாதேயோதுஞ்
சூத்திரமெல்லாம் வழக்கே நோக்குதல்  நூற்கிடையாகலின்  ‘வழக்கினுள்’
என்பது   மிகை;  அதனாற்   செயற்கைப்பொருள்   காரணங்கொடுத்து
ஆக்கங்கொடாதே  சொல்லுதலும்,   காரணமும்  ஆக்கமும்  இரண்டுங்
கொடாதே சொல்லுதலுங் கொள்ளப்படும்.

(எ - டு.) கடுவுங்  கைபிழி  யெண்ணெயும்  பெற்றமையான்  மயிர்
நல்ல எனவும், பைங்கூழ்நல்ல எனவும் வரும்.

எனவே   செயற்கைப்பொருள்  காரணமும் ஆக்கமுங் கொடுத்தலும்,
காரணமொழிய         ஆக்கங்கொடுத்தலும்,         ஆக்கமொழியக்
காரணங்கொடுத்தலும்,  காரணமும்  ஆக்கமும்   இரண்டுங்  கொடாதே
சொல்லுதலும் என நான்குவகைத்து.  இவற்றுள் முன்னையவிதியொன்றும்
மரபிலக்கணம்;   பின்னைய   மூன்றும் மரபுவழுவமைதி.