சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

39

இயற்பெயரும் சிறப்புப்பெயரும் ஒருங்குவரின் அவற்றைச்
சொல்லும் முறைமை
 

41.

சிறப்பி னாகிய பெயர் நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.

 

என்  -   எனின்     இதுவும்    ஒருபொருண்மேல்    இருபெயர்
வழுக்காத்தலை நுதலிற்று.

(இ - ள்.) சிறப்பினாகிய    பெயர்ச்சொற்கும்    உம்மையாற்   பிற
பெயர்க்கும்  இயற்பெயராகிய  சொல்லை  முற்படச் சொல்லார்; பிற்படச்
சொல்லுவர் ஆசிரியர், (எ - று.)

(எ - டு.) ஏனாதி நல்லுதடன்,  வாயிலான் சாத்தன், படைத்தலைவன்
கீரன் என இவை சிறப்புப்பெயர்.

பிறவும் என்றது  குலத்தினான்  ஆயபெயரும்,  கல்வியினான்  ஆய
பெயரும், தொழிலினான் ஆயபெயரும், பிறவும் என்பது.

(எ - டு.) சேரமான் சேரலாதன்.  சோழன்  நலங்கிள்ளி, பாண்டியன்
மாறன்:  இவை  குலப்பெயர்.  ஆசிரியன்  சாத்தன்  என்றாற்போல்வன
கல்வியினா  னாகிய  பெயர்.   வண்ணாரச்சாத்தன்,   தச்சக்  கொற்றன்,
நாவிதன் மாறன்: இவை தொழிலினானாகிய பெயர்.

இதனாற் சொல்லியது  ஒருபொருட்கு  இருபெயர்  கூறும்வழி   யாது
முற்கூறினும்  அமையும்  என்று கூறலாகாது.  மேற்றொட்டுங்  கூறிவந்த
மரபானே  கூறாவிடின் அப்பொருண்மேற்  செல்லாது  பிறபொருண்மேல்
நோக்குப்படுமென மரபு வழுவற்க என்றவாறாயிற்று.              (41)

ஒருபொருள்மேல் பலபெயர் வரின் அவற்றைச்
சொல்லும் முறைமை
 

42.

ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி
தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே.

 

என்  -  எனின்   ஒருபொருள்மேற்  பலபெயர்  வழூஉக்  காத்தல்
நுதலிற்று.

(இ - ள்.) ஒரு பொருளைக் கருதிய வேறு வேறாகிய பெயர்ச் சொற்
பெயர்க்கு  வரும்  வினையை  வேறுபடச்  சொல்லின் ஒரு பொருட்குப்
பொருந்தும்   இடமில்லை,   அதனான்    வரும்பெயரை   யெல்லாஞ்
சொல்லிப் பின் தொழில்சொல்லுக, (எ - று.)

(எ - டு.)  ஆசிரியன்  பேரூர்கிழான்  செயிற்றியன் இளங்கண்ணன்
சாத்தன் வந்தான் என வரும்.