என் - எனின் மேற் சூத்திரத்திற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.)மேற்கூறிய வினை வேறுபடூஉம் பல பொருளொரு சொல், வினையான் வேறுபட நில்லாது பொதுவாகிய வினையோடு பொருந்திப் பொருட் பொதுமைப்பட நின்றுழியும், மேல் வினையான் வேறுபட்டாற் போல இன்னது இது வென வேறுபட நிற்றலும் வழக்கிடத்து உண்டு, (எ - று.) (எ - டு.) மா வீழ்ந்தது என்பது, வீழ்தல் வினை எல்லா மாவிற்கும் பொதுவே யெனினும், இவ்விடத்து இக்காலத்து இவடன சொல்லுகிறது இம்மாவினை யென்று உணர நிற்கும் என்றவாறு. என்றது முன்கூறிய வினைவேறுபடாப் பலபொரு ளொருசொல்லும் ஒருநிலைமைக்கண் வினை வேறு படூஉம் பல பொருள் ஒருசொற்போல உணர நிற்கும், (எ-று.) அஃதேல் பல பொருள் ஒரு சொல்லினை இரண்டாக ஆக்கியது என்னை ஒன்றே ஆகற்பாற்றெனின், அவ்வாறு ஒன்றாயதனையே உணர்தல் வேற்றுமை நோக்கி இரண்டாகப் பகுத்தார் என உணர்க. (54) வினை வேறுபடாஅப் பலபொருளொருசொல் |