என் - எனின், திணைவழுக்காத்தல் நுதலிற்று. (இ - ள்.) குடிமை என்னும் சொல்லும், ஆண்மை யென்னும் சொல்லும், இளமை யென்னும் சொல்லும், மூப்பு என்னும் சொல்லும், அடிமையென்னும் சொல்லும், வன்மையென்னும் சொல்லும், விருந்து என்னும் சொல்லும், குழு என்னும் சொல்லும், பெண்மை யென்னும் சொல்லும், அரசு என்னும் சொல்லும், மகவு என்னும் சொல்லும், குழவி யென்னும் சொல்லும், தன்மை திரிந்ததனாற் பெற்ற பெயர்ச் சொல்லும், உறுப்பிற் பெயர்ச் சொல்லும், காதல் என்ற சொல்லும், சிறப்பித்துச் சொல்லும், செறுத்துச் சொல்லும் சொல்லும், விறல் என்னும் சொல்லும் என்று சொல்லப்பட்ட பதினெட்டுச் சொல்லும் உட்படவந்த தன்மையனவும், பிறவும் அவற்றொடு கூட்டித் தொக்கு இவ்வகையாகிய குறிப்பினான் உணரப்படுஞ் சொற்களெல்லாம் உயர்திணையிடத்தே நிலை பெற்றன வாயினும், அஃறிணையிடத்துச் சொல்லுமாறு போலச் சொல்லப்பட்டு நடக்கும், (எ - று.) (எ - டு.) இவற்குக் குடிமை நன்று, தீது; ஆண்மை நன்று, தீது; இளமை நன்று, தீது; மூப்பு நன்று, தீது; அடிமை நன்று, தீது; வன்மை நன்று, தீது; விருந்து வந்தது, போயிற்று; குழு நன்று, பிரிந்தது என வரும். இவற்கு என்பதை ஏற்புழியொட்டிக்கொள்க. பெண்மை நன்று, தீது; அரசு வந்தது, போயிற்று; மகநன்று; தீது; குழவி எழுந்தது, கிடந்தது. தன்மை திரிபெயர்; அலிவந்தது, போயிற்று. உறுப்பின் கிளவி: குருடு வந்தது, போயிற்று. காதல்: என் யானை வந்தது, போயிற்று. என் பாவை வந்தது, போயிற்று; சிறப்பு; கண்போலச் சிறந்தாரைக் கண் ணென்றலும், உயிர்போலச் சிறந்தாரை உயிரென்றலுமாம்; ஆதலின், அஃது “ஆலமர்செல்வன் அணிசால் பெருவிறல் - போலவரும் எம் உயிர், என் உயிர் வந்தது, போயிற்று; என் கண் வந்தது, போயிற்று எனவும் வரும். செறற்சொல்: கெழீஇயிலி வந்தது, போயிற்று; என் காதல் வந்தது, போயிற்று; பொறியறை வந்தது, போயிற்று. விறற்சொல்; பெருவிறல் வந்தது, போயிற்று எனவரும். |