சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

51

‘அன்ன     பிறவும்’ என்றதனால் பேடிவந்தது, பேடிகள்  வந்தன,
வேந்து  வந்தது, வேள் வந்தது, குரிசில் வந்தது, ஒரு கூற்றம்  வந்தது,
புரோசு வந்தது, உலகு வந்தது என்னுந் தொடக்கத்தனவுங் கொள்க.

இவற்குக்    குடிமைநன்று என்றதன்பொருள் இவற்குக்  குடிமகன்
நல்லன்  என்னும்  பொருண்மையாகக்  கொள்க.  பிறவும்  இவ்வாறே
உயர்திணையாக  உணர்க.  குடிமை  என்பது  குடியாண்மை  எனவும்,
ஆண்மை  என்பது  ஆண்மகன்  எனவும், இளமை என்பது  இளவல்
எனவும்,  மூப்பு  என்பது  முதுமை எனவும், அடிமை   என்பது அடி
எனவும்,  வன்மை  என்பது  வலி எனவும், விருந்து என்பது  புதுமை
எனவும்,  குழு  என்பது  கூட்டம்  எனவும்,  திரள் எனவும்,  ஆயம்
எனவும்,  அவை எனவும், பெண்மை யென்பது பெண் எனவும், குழவி
என்பது  பிள்ளை  எனவும் மதலை எனவும் பிறவும்  வாய்பாடுற்றமை
அறிக.

இவற்றுள்     ஆண்மை  பெண்மை  என்றாற்போல்வன  விரவுப்
பெயராய்   நிற்கும்.   குடிமை   அடிமை  அரசு  என்றாற்போல்வன
உயர்திணைப் பெயராய் நிற்கும்; இவ்விகற்பமும் அறிந்து கொள்க.

இக்குடிமை     முதலியன  எல்லாம் உயர்திணைப்பண் பாகலான்
அப்பண்புச்சொல்   தன்பொருண்மேல்   ஒரு   ஞான்றும்  நில்லாது
தன்னையே   யுடைய   பொருண்மேலே  தன்பொருளுந்  தோன்றிப்
பிரியாது      நின்றமையின்      உயர்திணையாயிற்று     என்பது.
அவையிற்றிற்கடிபண்பு  என்பது போதல் வேண்டிக் குடிமையாண்மை
யெனப் பண்பு வாய்பாடு படுத்துக் கூறினார் போலும்.

தன்பொருண்மேல்  நில்லாது என்றது என்னை, இளமை, மூப்பென்
றாற்போல்வன  அவற்றிக்கு  அப்பண்பு  தன்மேலும்  வழக்குண்டால்
எனின்,  அவ்வாறு  வருவனவுஞ்  சிறுபான்மை உளவேனும் அடிமை,
அரசு,  மகவு,  குருடு,  கூன்  என்றாற்போல்வன பொருண்மேலன்றிப்
பண்பின் மேல் வழங்கலின்மையின் அவற்றிற் கெல்லாம் முன்கூறியதே
நினை வென்பது.

இனி     இவையெல்லாம் அப்பண்பின்மேல் எனவும், பண்புகொள
வருதலென்னும்   ஆகுபெயராற்  பொருண்மேலே  நின்றன  எனவும்,
அவற்   றுக்கண்ணது   ஈண்டு   ஆராய்ச்சி   யெனவும்,  அவற்றுப்
பண்புப்பொருண்   மேல்  வழக்கில்லனவற்றை  இறந்த  வழக்கென்று
கூறியும் பிறவாறும் கூறுவாருமுளர். அதுவும் அறிந்து கொள்க.

இதனாற்     சொல்லியது  பண்புநிமித்தமாகப்  பொருள்  நிகழுஞ்
சொற்கள்    பலவுந்    தம்    பொருட்கேற்ப   உயர்   திணையாய்
முடியாதுசொற்கேற்ற    வாற்றான்   அஃறிணையான்   முடிவனகண்டு
அதனை ஈண்டு அமைத்தவாறு. என உணர்க.                 (57)