இளம். வ-று : ‘கறுத்து வந்தார்’ என்பது, வெகுண்டு வந்தார் என்பதாம். ‘சிவந்து நோக்கினார்’ என்பது வெகுண்டு நோக்கினார் என்பதாம். சேனா இ-ள் : 1‘நிற்கறுப்பதோர் அருங்கடி முனையள்’ எனவும் 2‘நீ சிவந்திறுத்த நீரழி பாக்கம்’ (பதிற். 13) எனவும், கறுப்பும் சிவப்பும் வெகுளியாகிய குறிப்புணர்த்தும், எ-று. கருமை செம்மை யென்னாது கறுப்புச் சிவப்பு என்றதனான் தொழிற்பட்டுழியல்லாது அவை வெகுளியுணர்த்தாமை கொள்க. தெய். இ-ள் : கறுப்பு என்பதும் சிவப்பு என்பதும் வெகுளி என்பதன் பொருளையுடைய, எ-று. உ-ம் : 3நிற்கறுத்தோர்அரும் அரணம் போல, ‘நீ சிவந்திறுத்த நீரழிபாக்கம் (பதிற். 13). நச். இதுவுமது. இ-ள் : கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள - கறுப்பும் சிவப்பும் வெகுளியாகிய குறிப்புப் பொருண்மையை யுடைய, எ-று. உ-ம் : ‘நிற்கறுத்தோர் அருங்கடி முனையரணம் போல’ ‘நீசிவந திறுத்த நீரழி பாக்கம்’ (பதிற். 13) எனவரும். கருமை செம்மை யென்னாது கறுப்பு சிவப்பு எனத் தொழிற்படுத்தினார்; அவை வெகுளியை யுணர்தினமையின். வெள் இ-ள் : கறுப்பு சிவப்பு என்னும் உரிச்சொற்கள் இரண்டும் வெகுளியாகிய குறிப்புணர்த்துவன, எ-று.
பொருள் :1. நின்னை வெகுள்விப்பதோர் அரிய காவலமைந்த போர் முனையிடத்தான் 2. நீ வெகுண்டு தானையுடன் தங்கி முற்றுகையிட்டதனால் நீர்மையழிந்த பேரூர்கள். 3. நின்னைக் கோபித்தோரது அரிய அரணம் போல. |