130

‘நொசி மருங்குல்’ என்பது, நுண்மருங்குல் என்பதாம்.
‘நுழை மருங்குல்’ என்பதும் அது.
‘நுணங்கு மருங்குல்’ என்பதும் அது.

சேனா

இ-ள் : ‘நொசிமட  மருங்குல்’  (கலி.  60)   எனவும்,    ‘நுழை
நூற்கலிங்கம்’  (மலைபடு.  561)  எனவும்,  ‘நுணங்கு  துகில் நுடக்கம்
போல’   (நற்.   15)  எனவும்,  நொசிவு  முதலாயின  நுண்மையாகிய
பண்புணர்த்தும், எ-று.

தெய்

இ-ள் : நொசிவு   என்பதூஉம்   நுழைவு  என்பதூஉம் நுணங்கு
என்பதூஉம் நுண்மை என்பதன் பொருள்படும், எ-று.

உ-ம் : ‘நொசி      மருங்குல்’     (குறிஞ்சிக்கலி.  24) ‘நுழை 
நூற்கலிங்கம்’ (மலைபடு. 561) ‘நுணங்கிய கேள்வியர்’ (குறள். 416).

நச்.

இதுவுமது.

இ-ள் : நொசிவும்    நுழைவும்    நுணங்கும்   நுண்மைநொசிவு
முதலியன நுண்மையாகிய பண்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘நொசிபடு மருங்குல் கசிவுறக் கைதொழா’
       ‘இழைமருங்கறியா நுழைநூற் கலிங்கம்’ (மலைபடு. 561)
       ‘நுணங்கு துகில் நுடக்கம் போல’ (நற். 15)

எனவரும்.

‘நுணங்கு     மின்கொடி  மின்னார்  மழைமிசை’   என நுணங்கு
1நுடக்கத்தை  யுணர்த்துதல்  ‘கூறிய  கிளவி’  (உரி.  92) என்பதனாற்
கொள்க.

வெள்

இ-ள் : நொசிவு   நுழைவு   நுணங்கு   என்னும்  உரிச்சொற்கள்
நுண்மையாகிய பண்புணர்த்துவன, எ-று.

உ-ம் : ‘நொசி    மருங்குல்’    எனவும்,   ‘நுழைநூற் கலிங்கம்’
எனவும், ‘நுணங்கு   துகில்   நுடக்கம்   போல’  எனவும்   வரும்.


1. நுடக்கம் - அசைவு, வளைவு