‘மத களிறு’ என்றக்கால் வலிய களிறு என்பதாம். சேனா. இ-ள் : 1‘பதவு மேய்ந்த மதவு நடை நல்லான்’ (அகம் 14) எனவும், 2‘கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு’ (அகம் 36) எனவும், மதவென்பது மடனும் வலியுமாகிய குறிப்புணர்த்தும், எ-று. தெய். இ-ள் : மதவென்னும் சொல் மடம் என்பதன் பொருண்மையும் வலி என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று. உ-ம் : பதவு மேய்ந்த மதவு நடை நல்லான் (அகம் 14) - இது மடம். ‘கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு (அகம் 36) - இது வலி. நச். இதுவுமது. இ-ள் : மதவே மடனும் வலியும் ஆகும்- மத மடனும் வலியுமாகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘பதவு மேய்ந்த மதவு நடை நல்லான்’ (அகம் 14) ‘கயிறிடு கதச்சேப்போல மதமிக்கு’ (அகம் 36) என வரும். ‘மதவுநடை’ என்பதில் மத மதவு என ஈறு திரிந்து நின்றது. வெள். இ-ள் : மதவென்னும் உரிச்சொல் மடம், வலி ஆகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘பதவு மேய்ந்த மதவு நடை நல்லான்’ எனவும், ‘கயிறிடு கதச் சேப்போல மதமிக்கு’ எனவும் மடனும் வலியுமாகிய குறிப்புணர்த்தியது. ஆதி. பொருள் : மதவு - மதங்கொண்ட - வலிய
1. பொருள் : புல் மேய்ந்த மடமை (இளமை)யான நல்ல பசு. 2. பொருள் : மூக்கில் கயிறு இட்டு இழுக்கப்படும் கோபமிக்கஎருது போல வலி மிகுந்து |