நன். 457 கடியென் கிளவி காப்பே கூர்மை விரைவே விளக்கம் அச்சம் சிறப்பே விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல் வரைவே மன்றல் கரிப்பின் ஆகும். இல. வி. 282: 11-15 கடியென் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சமுந் தேற்றொடு மணமும் அறைதலும் முறையென மொழிப முறையுணர்ந்தோரே. முத்து. ஒ. 46 கடியென் கிளவி காப்பே கூர்மை விரைவே விளக்கம் மிகுதிப் பொருள. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் குறிப்பு. உரை : கடி என்பது இப்பத்துப் பொருளும் படும், எ-று. வ-று : ‘வாள் வாய் கடிது’ என்றக்கால், வாள் வாய் கூரிது என்பதாம். ‘ஊர் கடிந்தார்’ என்றக்கால், ஊரை 1வரைந்தார் என்பதாம். ‘கடிகா’ (களவழி. 29) என்பது காப்புடைய கா என்பதாம் ‘கடித் தளிர்’ என்பது, புதுத்தளிர் என்பதாம். ‘கடிது வந்தார்’ என்றக்கால் விரைந்து வந்தார் என்பதாம். ‘கடும்பகல்’ என்றக்கால் (கலி. நெய். 28) விளங்கு பகல் என்பதாம். ‘கடும் புனல்’ (குறுந். 103) என்றக்கால், மிக்க புனல் என்பதாம். அது சிறந்த புனல் என்பதூஉமாம். ‘கடுங்கண்யானை’ என்றக்கால், அஞ்சத்தக்கயானை என்பதாம். 2‘கடுஞ்சூள் தருகுவன்’ (அகம் 110) என்றக்கால் முன்னின்று தேற்றம் தருவன் என்பதாம்.
1. வரைந்தார் - நீங்கினார், நீக்கினார். 2. கடுஞ்சூள்- கடியசூளுறவு. இங்குக் கடி என்பதன் பொருள் முன்னின்று தேற்றுதல் என்பதாம். |