வரலாற்றாற் பொருளுணர்த்தும் என்பது பெறப்படும் என ஐயமகற்றிய வாறெனக் கொள்க. வரலாற்றாற் பொருளுணர்த்தாவாயின், குழுவின் வந்த குறிநிலை வழக்குப்போல இயற்கைச் சொல்லெனப்படாவென்பது. தெய். எடுத்து ஓதப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றிற்கும் புறனடையுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : பொருள் பெறச் சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றினையும் முன்னும் பின்னும் வருமொழிகளின் பொருண்மையை யாராய்ந்து அவற்றிற்கியைந்த மொழியாற் புணர்ந்துரைக்கவே தத்தம் மரபினாற் பொருள் தோன்றும், எ-று. எனவே, பல பொருள் ஒரு சொல் வந்துழி, முன்னும்பின்னும் வந்த மொழியறிந்து அதற்கொப்பப் பொருளுரைக்க என்ற வாறாம். உதாரணம் மேற்காட்டப்பட்டன. நச். இஃது உரிச் சொற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. இ-ள் : மெய் பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்ஒரு சொற் பல பொருட் குரிமை தோன்றியும், பல சொல் ஒரு பொருட் குரிமை தோன்றியும் வரும் என இருகூறு செய்து பொருள் பெறக் கூறப்பட்ட உரிச் சொல் எல்லாவற்றையும், முன்னும்பின்னும் வருபவை நாடிதத்தமக்கு முன்னும்பின்னும் வருமொழிகளை ஆராய்ந்து, ஒத்த மொழியால் புணர்த்தனர் உணர்த்தல்அம் மொழிகளுள் தமக்குப் பொருந்தின மொழியோடு கூட்டிப் பொருள் உணர்த்துக; மரபின்அங்ஙனம் உணர்த்திய வரலாற்று முறைமையானே, தத்தம் பொருள்மன் தோன்றும். தத்தமக்குரிய பொருள் விளங்கித் தோன்றும், எ-று. எனவே, ‘உரிச் சொல் ஆணையால், பொருள் உணர்த்தாது’ வரலாற்று முறைமையால் பொருள் உணர்த்தும் என்றார். உ-ம் : ‘போகு கொடிம ருங்குல்’ என்பதில் ‘போகல்’ என்பது முன் வரும் சொல்லான் நேர்மையை யுணர்த்திற்று. ‘திரிகாய் விடத்தரொடு காருடை போகி’ (பதிற். 13) என்பதில் போகல் என்பது பின்வரும் சொல்லான் நெடுமையையுணர்த்திற்று. ‘உறுகால்’ (நற். 37) என்பது முன் வரும்கால் என்னும் சொல்லான் மிகுதியை யுணர்த்திற்று. |