‘அணங்கிய செல்லல்’ (அகம் 22) என்பது பின்வரும் ‘அணங்கிய’ என்னும் சொல்லான் இன்னாமையை யுணர்த்திற்று. இங்ஙனம் கூறவே, ‘முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும்’ (இடை. 3) என இடைச்சொற்கு ஓதிய விதி இதற்கும் கூறினாராயிற்று. வெள் இஃது இவ்வியலிற் கூறப்பட்ட உரிச்சொற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. இ-ள் : இச்சொல் இப்பொருட்கு உரித்து எனமேற்பொருள் பெறக் கூறப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றையும் அவற்றின் முன்னும் பின்னும் வரும் மொழிகளை ஆராய்ந்து, அவற்றுள் பொருளுக்குத்தக்க மொழியாலே ஒரு பொருளுணர்த்துக; இவ்வாறு உணர்த்தவே வரலாற்று முறைமையால் தத்தமக்குரிய பொருள் விளங்கும், எ-று. ஒரு சொல் பல பொருட்கும் பல சொல் ஒரு பொருட்கும் உரியவாய் வரும் உரிச்சொற்களால் ஒரு பொருளை வரைந்துணர்த்துங்கால் அவற்றின் முன்னும் பின்னும் வருகின்ற சொற்களை நாடி வரலாற்று முறைமையால் அப்பொருள் உணர்த்துக என்பதாம். உ-ம் : (நச்சினார்க்கினியர் கூறியனவே.) ஆதி உரிப் பொருள் தந்து நாம் கூறிய சொற்களையும் அவற்றுக்கு முன்னும் பின்னும் நிற்கும் சொற்களையும் ஆய்ந்து பொருத்தமான முறையிற் பொருள் சேர்த்து உணர்க. இவ்வுரிச்சொற்கள் மரபு தழுவி வருவனவாகுக. ஆயிரம் லட்சம் கோடி- கோடி ஒரு எண். அன்று கோடித்துணி உடுத்தான் - கோடி புதிது. பின் உற்ற சொற்களால் அப்பொருள். மரபு தழுவலும் ஒத்த மொழியும் ; மழ குழ இரண்டும் இளமைப் பொருள் உணர்த்தும் சொற்கள். குழக்கன்று மரபு, ஆயின் மழக்கன்று முறை கேடாகும். மடப்பிடி- மரபு; மடக் களிறு முறை கேடு. தட, கய இரண்டும் பெரிய என்னும் பொருள. தடங்கடல்மரபு; கயக்கடல் முறைக்கேடு. இதனையே மரபுதழுவல் வேண்டும் என்றார். |