உரை : மேற்குறிப்பிட்ட உரிச்சொல்லுள் உளவன்றே, அப்பொருட்கும் இப்பொருட்கும் உரியவென்று ஓதப்பட்டன. அவை உறுதவ நனி என்னுந் தொடக்கத்தன. மற்று அவற்றை மிகுதிப் பொருள் என்றார். அது பற்றி மிகுதி என்னை? என்றாற்கு, ஒன்றுவிடப் பெரிதாக என்பவால் எனின், அதனைக் கேட்டு ஒழியான், பெரிது எனப் படுவது என்னை யென்றான் எனச், சாலவாதல் என்றான்; என்பதனானும் ஒழியான் சாலவாதல் எனப்படுவது என்னை என்றான்; என, எத்துணையும் இறங்குதல் என்றான்; என, அத்துணையும் என்னை என்று இவ்வாறு பிரித்துச் சொற்களால் தெரிபு கூறுமேல் அது வேண்டா என விலக்கியவாறு. சேனா. பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திப் பொருளுணர்த்துங்காற்படும் முறைமை யுணர்த்துகின்றார். இ-ள் : ஒரு சொல்லை ஒரு சொல்லாற் பொருளுணர்த்திய வழி அப்பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாதெனப் பொருட்குப் பொருள் தெரியுமாயின், மேல் வருவனவற்றிற்கெல்லாம் ஈதொத்தலின், அவ்வினா இறை வரம்பின்றியோடும், அதனாற் பொருட்குப் பொருள் தெரியற்க, எ-று. ஒரு சொற்குப் பொருள் உரைப்பது பிறிதோர் சொல்லானன்றே? அச்சொற் பொருளும் அறியாதானை உணர்த்துமாறென்னை யெனின், அது வருகின்ற சூத்திரத்தாற் பெறப்படும். தெய். உரிச்சொற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : பொருட்குப் பொருள் தெரியின் - எல்லையின்று, எ-று. அஃதாவது உறு என்பதற்குப் பொருள் மிகுதி என்றால், மிகுதி என்பதற்குப் பொருள் யாதெனின் அதற்கும் ஒரு வாய் பாட்டாற் பொருளுரைப்பின் அதற்குப் பொருள்யாதெனப் பின்னும் வினாவும்; அவ்வாறு வினாவ, அவ்வாராய்ச்சி முற்றுப் பெறாதாம். அதனால் வினாவுவானும் அவ்வாறு வினாவற்க; செப்புவானும் அவ்வாறு செப்பற்க, எ-று. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால் இவ்வாராய்ச்சி பெயர்ச் சொற்கும் ஒக்கும் என்று கொள்க. அஃதேல் அப்பொருண்மை யுணராதான் அதனை யுணருமாறு என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும் என்க. |