தருகின்றவன் துறக்கத்துச் சேறலின், எமக்குக் கள் உண்டல் போயிற்று என்றல் இதன் பொருள் எனத் தொடர் மொழிகூறிப் பொருள் உணர்த்துக. உறுகால் (நற். 37) என்புழி, ‘உறு என்பது மிகுதி’ என்றால் பொருள் உணராதானை ‘கடுங்காலினது வலிகண்டாய் ஈண்டு உறு என்பதற்குப் பொருள் அஃது’ என்று தொடர்மொழிகூறியானும், கடுங்கால் உள்வழிக் காட்டியானும் உணர்த்துக. இங்ஙனம் நால்வகைச் சொல்லையும் மாணாக்கன் உணருமாறு அறிந்து உணர்த்தவே பொருட்குத் திரிபு இன்றாம். இங்ஙனம் உணர்த்தவும் உணராதானை உணர்த்தற்பாலன் அல்லன் என்கின்றது மேல் வருகின்ற சூத்திரம். வெள் இது சொற் பொருள் உணர்த்துமாறு கூறுகின்றது. இ-ள் : மாணாக்கர் உணருமாறு அறிந்து ஆசிரியன் உணர்த்த வல்லனாயின் இச்சொல் இப்பொருளினது என்றுதான் கூறிய பொருட்குத் திரிபில்லை, எ-று. உ-ம் : ‘உறுகால்’ என்புழி உறு என்பது மிகுதி யென்றால் உணராதானைக் ‘கடுங்காற்றினது வலிகண்டாய் ஈண்டு உறு என்னும் உரிச்சொல்லால் உணர்த்தப்படுவது’ என்று தொடர் மொழி கூறியோ அல்லது கடுங்காற்று வீசுமிடத்து அவனைக் கொண்டு நிறுத்தியோ மாணாக்கன் உணரும் வாயில் அறிந்து உணர்த்த வல்லனாயின் அப்பொருள் திரிபு படாமல் அவன் உணரும் என்பதாம். இங்ஙனம் அனுபவத்திற் காட்டி யுணர்த்தவும் உணராதானுக்கு அறிவுறுத்த முயலுதல் பயனில் செயலாம் என உணர்த்துவது வரும் சூத்திரமாகும். ஆதி. தானும் உணர்ந்து பிறருக்கும் உணர்த்த வல்லனாயின் உரிச்சொல் பொருளில் மயக்கம் ஏற்படாது. உறுவன்-அங்கு வந்தடைவான். உறுவன் திறங்கண்டு-பெரியோனுடைய ஆற்றலையறிந்து. உறு-மிகுதி ஆதலின், உறுவன் மிக்கோன் என உணர்ந்து கற்றவர் அறிவார்; ஐயமுறார், உணராதார் ‘உற்றவன்’ எனப் பிழைபட்டு நிற்பார். |