1

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

(உரைவளம்)

1உரியியல்

இளம்பூரணர்

இவ்வோத்து     என்ன    பெயர்த்தோவெனின்,     உரிச்சொல்
உணர்த்தினமையின் உரிச்சொல் ஒத்து என்னும் பெயர்த்து.

சேனாவரையர்

நிறுத்த முறையானே உரிச்சொல்லுணர்த்திய வெடுத்துக் கொண்டார்;
அதனான் இவ்வோத்து உரியியல் என்னும் பெயர்த்தாயிற்று.

தமக்கியல்பில்லா       விடைச்சொற்போலாது   இசை,   குறிப்பு,
பண்பென்னும்  பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயிற்று.
பெரும்பான்மையும்         செய்யுட்குரியவாய்          வருதலின்
உரிச்சொல்லாயிற்றென்பாருமுளர்.

தெய்வச்சிலையார்

இவ்வோத்து  என்ன பெயர்த்தோ   வெனின்,  உரிச்சொல்  ஒத்து
என்னும் பெயர்த்து; உரிச்சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர்.

உரிச்சொல்      என்பது   யாதோவெனின்,    ஒருவாய்பாட்டாற்
சொல்லப்படும்     பொருட்குத்    தானும்    உரித்தாகி    வருவது.
அதனானேயன்றே,  ஒருசொற்  பலபொருட்குரிமை  தோன்றினும், பல
சொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும் என ஓதுவாராயினர்.


1.உரிச்சொல்லியல் பாடம். (நச்.)