இலக்கண விளக்கம் : 280 குறிப்பும் பண்பும் இசையும் தோற்றிப் பெயரும் வினையும் போன்றவை யிரண்டற்கும் அடியு மாகி அவற் றேற் புழி நின்று ஒரு பொருட் குரிமையும் பலபொருட் குரிமையும் உடைய வாகி உணரா தவற்றை உணர்ந்தவை சார்த்தி உணர்வன உரிச்சொல். தொன்னூல் விளக்கம் : 138 உரிச்சொல் என்ப உரியியல் குணசொல் லாகிப் பெயர்வினை இணைந்து வருமே. முத்துவீரியம். ஒழிபியல். 26 உரிச்சொற் கிளவியை விரிக்குங் காலை இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடு மாறி ஒருசொல் பலபொருட் குரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றினும் பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல். இளம்பூரணர் என்பது சூத்திரம். இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உரிச்சொற்கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை : உரிச்சொற்கள் தோன்றுமிடத்து இசையும் குறிப்பும் பண்பும் பற்றிப் பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் சென்று பொருள்களை விளக்கும், என்றவாறு. மெய் என்பது பொருள்; தடுமாறுதல் என்பது பெயர் பற்றியும் வினைபற்றியும் வரும் வரவினை நோக்கி; அவ்வாறு தடுமாறுங்கால் ஒரு சொல் பல் பொருட்கு உரிமைப்பட்டுத் தடுமாறுதலும், பலசொல் ஒருபொருட்கு உரிமைப்பட்டுத் தடுமாறுதலும் உடைய. அவை அவ்வாறு தடுமாறித் தோன்றுதல் அவற்றிற்கு இலக்கணம்; அவ்வாறு தோன்றுங்கால் பயிலாத உரிச்சொற்களைப் பயின்ற உரிச்சொல்லோடு சார்த்தி உணரப்படும். அவ்வாறு சார்த்திச் சொல்லவே எவ்வகைப்பட்ட சொல்லாயினும் பொருள் விளங்கும். |