‘உறுகால்’ (நற்.300) என்றக்கால், உறு என்பதனை வழக்கினுள்ளார் பயிலாமையின், ‘மிகுகால்’ என்று சொல்லுப. மிகு என்பதூஉம் உரிச்சொல், அதனை நடையுள்ளார்1 பயின்றாராதலான், அந்நிகரனவற்றாற் பொருத்திச் சொல்ல அவை விளங்கித் தோன்றும் என்பது. இசைபற்றி நிற்பனவற்றிற்கு ‘இசை சென்று நிலை மருங்கு’ எனவும், குறிப்புப் பற்றித் தோன்றுவனவற்றிற்குத் ‘தத்தங்குறிப்புச் சென்று நிலை மருங்கு’ எனவும் படும் என்பது. 2இசைபற்றித் தோன்றின, ‘துவைத்தலும் சிலைத்தலும்’ (உரியியல் 61) என்னுந் தொடக்கத்தன. 3குறிப்புப்பற்றி வந்தன, ‘கறுப்பும் சிவப்பும்’ (உரி.75) என்னுந் தொடக்கத்தன. ‘நிறத்துரு வுணர்த்தற்கு முரிய’ (உரி.76) என்றாராகலின் ஆண்டுப் பண்பு எனவும் வரும். ஒரு சொல்லாகப் பல பொருட்குரியன, ‘கடியென்கிளவி’ (உரி.86) என்னுந் தொடக்கத்தன. பல சொல் ஒரு பொருட்குரியன, ‘உறுதவநனி’ (உரி.3) என்னுந் தொடக்கத்தன. முன், இடைச் சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் றோன்றும் என்ப (பெயரியல்.5) என்புழி, 1 நிரனிறை வாய்பாட்டதாகலான், அது நீக்குதற்குப் பெயரினும் வினையினும் மெய்தடுமாறி’ என்றார் என்பது.
1. நடையுள்ளார்-உலகிலுள்ளார் 2. இசை-ஒலி 3. குறிப்பு மனத்தாற் குறித்துப் பொருளுணர்வது; கறுப்பு என்பது வெகுளியைக் குறிப்பதாக இடம் நோக்கியுணர்வது. 1. முன் சூத்திரம், “சொல்லெனப்படுப பெயரே வினையென்று ஆயிரண்டு என்ப” (பெய 4) என்று கூறிப் பின் இச்சூத்திரம் கூறப்படுதலின் பெயர் வழி இடைச்சொல்லும் வினைவழி உரிச்சொல்லும் தோன்றும் என நிரல் நிறைப்பொருள் கொள்ளுமாறுஅமைந்தமை காண்க. |