சேனாவரையர் இதன் பொருள் ; உரிச்சொல்லை விரித்துரைக்குமிடத்து, இசை குறிப்புப் பண்பு என்னும் பொருண்மேற்றோன்றிப் பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் தம்முருபு தடுமாறி, ஒரு சொற் பல பொருட்குரித்தாய் வரினும், பல சொல் ஒரு பொருட்குரித்தாய் வரினும் கேட்பானாற் பயிலப்படாத சொல்லைப் பயின்றவற்றோடு சார்த்திப் பெயரும் வினையுமாகிய தத்தமக்குரிய நிலைக்களத்தின்கண் யாதானும் ஒரு சொல்லாயினும் வேறு வேறு பொருளுணர்த்தப்படும்’ என்றவாறு. என்றது’ இசைகுறிப்புப் பண்பு என்னும் பொருளவாய்ப் பெயர்வினை போன்றும் அவற்றிற்கு முதனிலையாயும் தடுமாறி ஒரு சொல் ஒரு பொருட் குரித்தாதலேயன்றி, ஒரு சொற் பல பொருட்கும் பல சொல் ஒரு பொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல் என்றும், அவை பெயரும் வினையும் போல் ஈறு பற்றிப் பொருளுணர்த்தலாகாமையின், வெளிப்படாதவற்றை வெளிப்பட்டவற்றோடு சார்த்தித் தம்மையெடுத்து ஓதியே அப்பொருளுணர்த்தப்படும் என்றும், உரிச் சொற்குப் பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்தும் முறைமையும் உணர்த்தியவாறு. குறிப்பு : மனத்தாற் குறித்துணரப்படுவது. பண்பு : பொறியான் உணரப்படும் குணம். 1கறுப்பு, தவ என்பன பெயர் வினைப்போலி. துவைத்தல் துவைக்கும் என்பன பெயர் வினைக்கு முதனிலையாயின. 2உறு முதலாயின மெய்தடுமாறாது வருதலின், பெயரினும் வினையினும் மெய்தடுமாறி’ யென்றது’ பெரும்பான்மை பற்றி
1. பெயரெனவும் படாது வினையெனவும் படாது பெயர் போலவும் வினைபோலவும் ஆளப்படுதலின் பெயர் வினைப் போலியாம். கறுப்பு பெயர்ப்போலி, தவ வினைப் போலி. 2. உறு என்பது திரியாது. உற்றான் என்பதில் வரும் உறு என்பது பகுதி; அது உற்றான் என வினைப்பட்டது. ஆனால் உறு பொருள் என்பதில் உறு என்பது மிகுதி என்னும் பொருள் பட்டுத் திரியாது வந்தது; இது எங்கும் திரியாமல் உறு என்றே வரும். உற்றான் என்பதில் உள்ள உறு வினைச் சொல் பகுதி. தெய்வச்சிலையார் இரண்டும் ஒன்றென்பர். |