சிலையார் தாது என்பர். அவரது கொள்கையில் வடமொழி யிலக்கணவாசிரியரான சாகடாயனரைப்போல் எல்லாப் பெயரும் தாதுவிலிருந்து வந்தன என்று கொள்ளல் வேண்டும். செயலைக் குறிக்கும் பகுதிகளுக்கே தாது எனப் பெயராதலானும், மழவு, குழவு முதலிய சிலபெயர்கள் தாதுவிலிருந்துபெறப்பட்டன என்று கொள்ளுவது எளிதன்று ஆகலானும், எல்லாப் பெயர்களும் தாதுவிலிருந்து பிறந்தன எனக்கொள்ளாது பெரும்பான்மையன தாதுவிலிருந்தும், சிறுபான்மையன அவ்வாறன்றியும் பிறந்தன என்று வடமொழியிலக்கணவாசிரியரான கார்க்கியரைப் போல் கொள்ளுவது பொருத்தமாகும். அவ்வாறாயின் சில பெயர்களின் பகுதியும் உரிச் சொல் என்னலாம் என்பது என் கருத்து. ஆதலின் உரிச் சொல் என்பது பெயர், வினை இவற்றின் பகுதி என்னலாம். சிவ. இச்சூத்திரம் உரிச்சொல் இலக்கணம் கூறவில்லை; உரிச்சொல்லின் தன்மை கூறிற்று எனச் சுப்பிரமணிய சாத்திரியார் கூறினும் இலக்கணம் கூறிற்றென்றலே நன்று. “பெயரெனப்படுபவை” (பெய.6) எனப் பெயர்க்கும், “வினையெனப்படுவது” (வினை. 1) என வினைக்கும், “இடையெனப்படுப” (இடை 1) என இடைச் சொற்கும் இலக்கணம் கூறியவாறே உரிச்சொற்கும் இலக்கணம் கூறினார் எனக் கொள்வதே பொருத்தம். உரிச்சொல்லின் தன்மையும் இலக்கணத்தின் பாற்படுவதே. பொருள் கூறப்படும் உரிச்சொற்கள் |