இளம். இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இருவகைய உரிச்சொல், வெளிப்படுவனவும் வெளிப்படாதனவும் என; 1அவற்றுள் வெளிப்பட்ட உரிச்சொற்களது பொருள் சொல்ல வேண்டா; அறிந்த பொருட் பெற்றியான் பொருட் செல்லுதல் என்பது உணர்த்தியவாறு. அவ்வாறு வெளிப்பட்ட உரிச்சொற்களாவன: கலித்தது, குழைத்தது என்னுந் தொடக்கத்தன. இனி வெளிப்பட வாராதனவற்றை விரிக்கின்றார். சேனா. இ-ள்: வெளிப்பட்ட உரிச்சொல் கிளந்ததனாற் பயன் இன்மையின் கிளக்கப்படா; வெளிப்பட வாரா உரிச்சொல் மேற்றுக் கிளந்தோதல், எ-று. ‘பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி’ எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்’ என்றதனால் பயிலாதவற்றைப் பயின்றவற்றோடு சார்த்தியும், பயின்றவற்றைப் பிறிதொன்றனோடு சார்த்தாது தம்மையே கிளந்தும் எல்லா வுரிச்சொல்லும் உணர்த்தப்படும் என்பது பட்டு நின்றதனை விலக்கி, பயனின்மையாற் பயின்ற உரிச்சொற் கிளக்கப்படாது பயிலாத உரிச்சொல்லே கிளக்கப்படும் என வரையறுத்தவாறு. ‘மேல’ என்பது ‘மேன’ என நின்றது. தெய். ஈண்டு ஓதுகின்ற உரிச்சொல் இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வழக்கின்கண் எல்லாரானும் அறியப்பட்ட சொல் ஈண்டு எடுத்து ஓத வேண்டா; அறியப்படாத உரிச்சொல் மேன, வருகின்ற சூத்திரங்கள், எறு.
1. “அவற்றுள் வெளிப்பட்ட உரிச் சொற்களது பொருள் சொல்ல வேண்டா, அவை தாமே யறியப்படுதலின்; ஈண்டு அறியப்படாத உரிச்சொற்களுக்கே பொருள் சொல்லப்படும் என்பது உணர்த்தியவாறு” என்றிருப்பின் நன்று என்பர், கு. சுந்தரமூர்த்தி. |