இ-ள் : 3‘உறுபுனல் தந்துல கூட்டி’ (நாலடி. 185) எனவும், “ஈயாது வீயும் உயிர்தவப் பலவே’ (புறம். 236) எனவும், ‘வந்துநனி வருந்தினை வாழியென் நெஞ்சே’ (அகம். 19) எனவும், உறு, தவ, நனி என்பன மிகுதி என்னும் குறிப்புப் பொருள் உணர்த்தும், எ-று. குறிப்புச் சொற் பரப்புடைமையான் முற்கூறினார். தெய் இஃது உரிச் சொற்களிற் சில சொற் பொருளுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. இக்கருத்து வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும். இ-ள் : உறு தவ நனி என்று சொல்லப்பட்ட மூன்று சொல்லும் மிகுதி என்னும் சொல்லான் அறியப்படும் பொருளை யுணர்த்தும், எ-று. உ-ம் : ‘உறுபுனல் தந்துல கூட்டி’ (நாலடி. 185) ‘ஈயாது வீயும் உயிர்தவப் பலவே’ (புறம். 235) ‘வந்து நனி வருந்தினைவாழியென் நெஞ்சே’ (அகம். 19)இவை மிகுதி உணர்த்தியவாறு கண்டு கொள்க. நச் இது, குறிப்புப் பற்றி வரும் உரிச் சொல் பொருள்படுமாறு கூறுகின்றது. இ-ள் : அவைதாம்வெளிப்பட வாராத உரிச்சொற்கள் தாம் யாவை எனின், உறு தவ நனி என வரூஉம் மூன்றும் உறுவெனத் தவவென நனியென வருகின்ற மூன்று உரிச்சொற்களும், மிகுதி செய்யும் பொருள் என்பமிகுதி யென்னும் உரிச்சொல் காட்டும் குறிப்புப் பொருளை உடைய என்று கூறுவர் ஆசிரியர், எ-று. குறிப்புச் சொல் பரப்பு உண்மையின் முற்கூறினார். உ-ம் : ‘உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்’ (நற். 300) ‘ஈயாது வீயும் உயிர்தவப்பலவே’ (புறம். 235) ‘வந்து நனி வருந்தினை வாழியென் நெஞ்சே’ (அகம்.19) எனவரும்.
3. பொருள் : ‘மிக்க நீர் (மழை) தந்து உலகை உண்பித்து 4. பொருள் :கொடாது அழியும் மக்கள் மிகப்பலர். |