சேனா. இ-ள் : ‘உருகெழு கடவுள்’ எனவும், ‘புரைய மன்ற புரையோர் கேண்மை’ (நற். 1) எனவும் உருவும் புரையும் உட்கும் உயர்பும் உணர்த்தும், எ-று. தெய். (உருவுட்காகும்) இ-ள் : உரு என்னுஞ்சொல் உட்கு என்பதன் பொருள்படும்,எ-று. உ-ம் : உருகெழு கடவுள்; உட்குமிக்க கடவுள் என்றவாறு. (புரையுயர்பாகும்) இ-ள் : புரை என்பது உயர்வு என்னும் பொருள்படும், எ-று. உ-ம் : புரையமன்ற புரையோர் கேண்மை (நற்1.) நச். இதுவுமது. இ-ள் : உரு உட்கு ஆகும் உரு என்னுஞ் சொல் உட்குதல் என்னும் உரிச்சொல்லது குறிப்புப் பொருட்டாம், புரை உயர்வு ஆகும் புரை என்னும் உரிச்சொல் உயர்வு என்னும் உரிச்சொல்லது குறிப்புப் பொருட்டாம், எ-று. உ-ம் : ‘உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த’ (புறம். 160) ‘புரைய மன்ற புரையோர் கேண்மை’ (நற். 1) என வரும். ‘உருவக் குதிரை மழவர் ஓட்டிய’ (அகம்.1 ) ‘உருவமென் றுரைத்தி யாயின்’ (சீவக. 1585) என உரு வடிவழகையும், ‘புரை தீர் கேள்விப் புலவரான’ எனப் புரை குற்றத்தையும் உணர்த்துதல், ‘கூறிய கிளவிப் பொருள்நிலை யல்ல (உரி. 92) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க. |