சேனா. இ-ள் : ‘குருமணித்தாலி’, ‘செங்கேழ் மென்கொடி’ (அகம். 80) எனக் குருவும் கெழுவும் நிறம் என்னும் பண்புணர்த்தும், எ-று. தெய். இ-ள் : குரு என்பதூஉ-ம், கெழு என்பதூஉ-ம் நிறம் என்பதன் பொருள்படும். உ-ம் : 3‘குருமணித்தாலி’, ‘செங்கேழ் மென்கொடி’ (அகம். 80) கெழு என்பது கேழ் எனவும் வரும். நச். இது, பண்பு. இ-ள் : குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே குரு என்னும் உரிச்சொல்லும், கெழு என்னும் உரிச்சொல்லும் நிறன் என்னும் உரிச்சொல்லது பண்புப் பொருளாம், எ-று. உ-ம் : ‘குருமணித்தாலி’, 4‘நறுஞ்சாந்து புலர்ந்த கேழ்கிளர் அகலம்’ (மதுரைக். 493) என வரும். ‘குரூஉத் துளி பொழிந்த’ குரூஉக்கண் இறடிப் பொம்மல்’ (மலைபடு. 169) எனக் குரு நீடலும், கெழு கேழ் என நீடலும் ஈறு கெடுதலும், ‘எழுத்துப் பிரிந் திசைத்தல் இவணியல் பின்றே’ (உரி 97) என்பதனாற் கொள்க. கெழு என்று வரும் இடம் உளதாயின் கொள்க. இக் கெழு பொருத்தத்தை உணர்த்துதலும், கெழு முதல் என்னும் வழக்கிற்கு முதல் நிலையாய் நிற்றலும் ‘கூறிய கிளவி’ (உரி. 92) என்பதனால் கொள்க. மேல்வரும் சூத்திரங்கட்கும் இவ்வாறே பொருள் கூறுக. வெள். இது பண்பு பற்றி வரும் உரிச்சொல் உணர்த்துகின்றது. இ-ள் : குரு என்னும் சொல்லும் கெழு என்னும் சொல்லும் நிறம் என்னும் பண்புணர்த்தும், எ-று.
3.பொருள்: நிறம் உள்ள மணி பதித்த தாலி, செந்நிற மென்கொடி. 4.பொருள் :மணமிக்கசந்தனம் புலர்ந்த நிறம் விளங்கும் மார்பு. |