இளம்: இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவையெல்லாம் குறிப்பு. வ-று : ‘அதிர்கண் முரசம்’ என்றக்கால் நடுங்குகண் முரசம் என்பதாம். ‘விதிர்ப்புற்றுக் கண்ணிமையார்’ என்றக்கால் நடுக்குற்று என்பதாம். சேனா. இ-ள் : ‘அதிர வருவதோர் நோய்’ (குறள் 429) எனவும், 1விதிர்ப்புற வறியா வேமக் காப்பினை’ (புறம் 20) எனவும் அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கமாகிய குறிப்புணர்த்தும், எ-று. 2‘அதிழ்வு’ என்று பாடம் ஓதி, ‘அதிழ்கண் முரசம்’ என்று உதாரணங் காட்டுவாரும் உளர். தெய்: இ-ள் : அதிர்வு என்பதூஉ-ம், விதிர்வு என்பதூஉ-ம் நடுக்கம் என்பதன் பொருள் உணர்த்தும், எ-று. உ-ம் : 3‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்’ (குறள். 429)’. ‘விதிர்ப்புற வறிய வேமக் காப்பினை’ (புறம். 20) நச். இதுவுமது. இ-ள் : அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும் அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : அதிர வருவதோர் நோய் விதிர்ப்புற வறியா ஏமக் காப்பினை (புறம். 20) என வரும்.
1. பொருள் : நடுக்கமுறுதலறியாத சேமமாகிய காவலுடையை. 2. யார் என்பது அறியக்கூடவில்லை. 3. பொருள்: எதிர்காலத்து வரக் கடவதாகிய ஒன்றை முன்னதாக அறிந்து காக்கவல்ல அறிவுடையார்க்கு நடுங்கும்படி வரக்கூடிய துன்பம் இல்லையாம். |