இடைச்சொல் என்னும் பொருண்மையென்னையெனின், பெயர் வினைகள் உணர்த்தும் பொருட்டுத் தான் இடமாக நிற்றலான் இடைச் சொல்லாயிற்று. வெள்ளை வாரணனார். இடைச் சொற்களின் இலக்கணம் உணர்த்தினமையால் இடையியல் என்னும் பெயர்த்தாயிற்று. பெயரையும் வினையையும் சார்ந்து தோற்றுதலின் அவற்றின் பின் கூறப்பட்டது. மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடை வருதலின் இடைச்சொல்லாயிற்று என்பர் சேனாவரையர். இடைச் சொல்லாவது பெயரும் வினையும் போலத் தனித்தனியே பொருள் உணர உச்சரிக்கப்படாது பெயர் வினைகளைச் சார்ந்து புலப்படும் என்றும், பெயரும் வினையும் இடமாக நின்று பொருளுணர்த்தலின் இடைச்சொல்லாயிற்று என்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பொருளையும் பொருளது புடை பெயர்ச்சியையும் தம்மாலன்றித் தத்தம் குறிப்பால் உணர்த்தும் சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொற்களும் ஆகாது அவற்றின் வேறும் ஆகாது இடை நிகரனவாய் நிற்றலின் இடைச்சொல் எனப்பட்டது என்பர் சிவஞானமுனிவர். ஆதித்தர். இடையியல்-இடைச்சொல் பற்றிய பகுதி எனப் பொருள் தரும். இடைச்சொல்லாவது யாது? தான் சேர்ந்த இடத்தாற் பொருள் வலியுறுஞ்சொல். இடை-இடம். ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’- பெயரியல் முதற் சூத்திரம். பெயர் வினை இடை உரி நான்கிற்கும் பொருள் உண்டு. பெயர்-மலை, வினை-நிற்கிறது. ‘மலை நிற்கிறது’ எனப் பொருள் தனித்தனியாகவும் தொடர்ந்தும் தெளிவாக விளங்குகிறது. மேல்-பொருள் யாது? ஏதோ ஒன்றின் மேல் எனப் பொருள் இருக்கிறது. ஆனால் தெளிவாக பொருள் இல்லை. கூரை மேல்-பொருள் தெளிவாகிறது. ஐ-ஒரு இடைச்சொல். பொருள் தெளிவில்லை. வீட்டை-ஒருவாறு தெளிவாகிறது. வீட்டைக் கட்டினான், வீட்டையிடித்தான், வீட்டை விற்றான், வீட்டை வாங்கினான் வீட்டையடைந்தான்-முன் உற்ற வினைமுற்றுடன் பொருள் மிக மிகத் தெளிவாகிறது. |