இவற்றுள் வினை விகுதிகளும் வேற்றுமையுருபுகளும் எப்பொழுதும் மொழியின் இறுதியிலும், அசை நிலைக்கிளவி இசை நிறைக்கிளவி என்ற இரண்டும் தனி மொழி போன்று மொழிக்கு முதலிலும் அல்லது இறுதியிலும், சாரியைகள் பெரும்பாலும் மொழிக்கு இடையிலும், தத்தம் குறிப்பாற் பொருள் செய்யும் கிளவிகளும், ஒப்பில் வழியாற் பொருள் செய்யுங் கிளவிகளும் தனி மொழி போன்று வாக்கியத்தினிடையிலும் வரும் ஆதலானும், சாரியைகளின் எண் மற்றெல்லாவற்றின் எண்ணினும் மிகுதியாய் இல்லாமையானும், இடைச் சொற்கள் யாவும் பெரும் பான்மையும் மொழிக்கு இடையில் வாரா, அங்ஙனமாயின், இடைச்சொல் என்பதன் பொருள் என்னையெனின், இடச்சொல் என்பதேயாம். அஃதாவது பெயரினிடத்தும் வினையினிடத்தும் அகத்தேனும் புறத்தேனும் தோன்றுவது என்பது. பெயர், வினை என்ற குறிப்பானே அவற்றிற்கு இலக்கணம் கூறியது போலவே, இடைச்சொல் என்ற குறியானே இதற்கும் இலக்கணம் கூறினர் என்பதே ஏற்புடைத்து. வை.தங்கமணி. 1 இடை என்னுஞ் சொல்லை இடப் பொருளுணர்த்தும் இடைச் சொல்லாகக்கொண்டு, பெயர் வினைகளுக்கு முன் பின் இடை ஆகிய இடங்களில் ஏதேனும் ஓரிடத்தைத் தமக்குரிய இடமாகக் கொண்டு, இயல்பாயும் ஈறுதிரிந்தும் இணைந்தும் சார்ந்துள்ள சொல்லின் பொருளை விளக்கமுறச் செய்வதே இடைச்சொல் எனப்படும். ச. பாலசுந்தரம். இடைச்சொற்களின் இயல்புணர்த்துதலின் இஃது இடையியல் எனப்பட்டது. இடைச் சொல்லியல் என்பது இடையியல் என நின்றது. இடைச்சொற்களின் இயல்புணர்த்து மாற்றான், அவை வகைப்படுமாறும் பெறப்பட வைத்து அவற்றுள் ஒரு சாரன இந்நூலகத்து முன்னும் பின்னும் பெறப்படுதலின், ஒரு சாரனவற்றிற்குரிய சிறப்பிலக்கணமும் அவை பற்றிய மரபும் இவ்வியலின்கண் கூறுகின்றார்.
1.டாக்டர் ஏ.என். பெருமாள் மூலம் தெரிவித்த கருத்து இது. |