வ-று :‘கடல்போற் றோன்றல காடிறந் தோரே’ (அகம்.1) என வரும். உம்மை எதிர்மறை யாகலின் குறையாது நிற்றலே பெரும்பான்மை. சேனா. இ-ள் : செய்யுள் இறுதிக்கண் நின்றிசைக்கும் ஈற்றசை ஏகாரங் கூற்றிடத்து ஒரு மாத்திரைத் தாகலும் உரித்து எ-று. உ-ம் :‘கடல்போற் றோன்றல காடிறந்தோரே’ (அகம்1) என்புழி ஓரளபாயினவாறு கண்டு கொள்க. தேற்ற முதலாயின நீக்கி ஈற்றசையே தழுவுதற்கு ‘ஈற்று நின்றசைக்கும்’ என்றார். செய்யுளிடை நிற்பதனை நீக்குதற்கு ‘ஈற்று` நின்றசைக்கும்’ என்றே யொழியாது ‘இறுதி’ என்றார். மேல் நின்ற செய்யுளுறுப்போடு பொருந்தக் கூறுதற்கண் என்பார் ‘கூற்று வயின்’ என்றார். உம்மை எதிர்மறை. தெய். ஏகாரத்திற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் ; செய்யுள் இறுதிக்கண் நின்று ஒலிக்கும் ஏகாரம் சொல்லுமிடத்து ஒரு மாத்திரையாகி நிற்கவும் பெறும்: எ-று. உ-ம் :‘கடல் போற் றோன்றல காடிறந் தோரே, (அகம் 1) இது ஒரு மாத்திரையாகி நிற்கும். நச். இஃது, ஈற்றசை ஏகாரத்திற்கு வேறோர் இலக்கணங் கூறுகின்றது. இ-ள் :ஈற்று நின்று இசைக்கும் ஏ என்இறுதி- செய்யுள் இறுதிக்கண் நின்று இசைக்கும் ஈற்றசை ஏகாரம், கூற்றுவயின்- அச் செய்யுளிடத்துப் பா என்னும் உறுப்பினை நிலை பெறக் கூறுமிடத்து, ஓர் அளபு ஆகலும் உரித்தே-தனக்கு உரிய இரண்டு மாத்திரையேயன்றிப் பின்னரும் ஒரு மாத்திரை உண்டாய் வருதலும் உரித்து, எ-று. உம்மையான், மூன்று மாத்திரை பெறாது இரண்டு மாத்திரை பெற்று வருதலும் உரித்து ஆயிற்று. பா என்னும் உறுப்பினை நிலைபெறக் கூறுமிடத்து மூன்று மாத்திரை பெறுவது செய்யுள் இறுதிக்கண் நிற்கும் ஈற்றசையே என்பது அறிவித்தற்கு ‘ஏயென் இறுதி’ என்று மீட்டுங் கூறினார். |