தொகை எனப் பொதுப்படக் கூறிய அதனால், எண்ணுப் பெயரே அன்றி ‘அனைத்தும், ‘எல்லாம்’ என்னுந் தொடக்கத்தனவும் கொள்க. ஆதி. எண்ணுப் பொருளில் வரும் உம், என இவ்விரண்டும் தனித்தனிச் சேர்க்கையே யன்றி இரண்டும் சேர்முறைமை கொண்டவையல்ல. (இரண்டும் ஒன்றல்ல). தந்தையும் தாயும் மகனும் மகளும்-உம் எண். தந்தையெனத் தாயென மகனென மகளென-என எண், இவை அவற்றுக்கு ஏற்ற வகையில் தொடர்ந்து முடியும். சிவ. ஆதித்தர், “உம்மையும் எனவும் எண்ணுப் பொருளில் வரும் போது சேர்ந்து வருதல் இல்லை; அதாவது ‘தந்தையும் மகனும் தாயென மகளென’ எனவருதல் இல்லை; தனித்தனியே வரும் அதாவது தந்தையும் மகனும் தாயும் மகளும் எனவும் ‘தந்தையென மகனெனத் தாயென மகளென’ எனவும் வரும்” என்பர். தொகுதிஎன்பதற்கு அவர் சேர்தல் எனப் பொருள் கொண்டார். சூத்திரப் போக்கு அவ்வாறின்மையானும் எண்ணுவோர் ஓர் இடைச்சொற்கொண் டெண்ணார் ஆதலானும் அவர்கருத்து ஏற்பதற்கில்லை. பால. ‘என்று’ என்னும் இடைச்சொல் ‘என’ என்பதனொடு பொருளான் ஒத்தலின் ‘என்று’ என்பதற்கும் இவ்விதிஒக்கும் எனக் கொள்க. இஃது உரையிற் கோடல் என்னும் உத்தி. எண் ஏகாரம் இடையிட்டுவரல் |