சொல்லதிகாரம் - இடையியல்9

உண்டான்   எனவும்,    என்மனார்    என்றி  சினோர்  எனவும்,
அருங்குரைத்து  (புறம்.5)  எனவும்   அவற்றிற்கு  உறுப்பாய் வருதலும்
கொள்க.

இனி ஓர் உரை : - 1இடைச் சொற்கிளவியும் உரிச்சொற்கிளவியும்
அவற்றுவழி  மருங்கிற்றோன்றும்’  என்பதற்குச்  சார்ந்து   வருதலான்
இடைச்சொல்லும்  உரிச்சொல்லும்  சிறப்பில;   இவையுட்படச்   சொல்
நான்காம்  என்பது   கருத்தாகலின்,  இடைச்சொல் பெயரும் வினையும்
சார்ந்து  வரும் என்னும் வேறுபாடு  அதனாற் பெறப்படாது.  என்னை?
இடைச்சொல்    பெயர்    சிறப்பின்மையும்,    சொல்   நான்காதலும்
உணர்த்துதல் சிதையாது ஆகலான். அதனான்  இடைச்சொல்  பெயரும்
வினையும்  சார்ந்து வரும் என்பது இச்சூத்திரத்தாற்  கூறல்  வேண்டும்
என்ப.  அவ்வுரைவுரைப்பார்  ‘பெயரினும் வினையினும் மெய் தடுமாறி’
(உரி.1)    என்பதற்கும்,   ‘பெயரும்   வினையும்   சார்ந்து’   என்று
பொருளுரைப்ப.

தெய்வச் சிலையார்.

‘இடையெனப்படுப... தமக்கியல்பிலவே’   என்பது   இடைச்  சொல்
இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் :  இடைச்சொல் என்று சொல்லப்படுவன பெயரோடு கூடியும்
வினையோடு கூடியும் வழக்குப் பெற்றியலுமல்லது தமக்கென  வழக்கில,
எ-று.

என்றது,  மேல்   அதிகரிக்கப்பட்ட   சொல்நான்கினுள்    இடைச்
சொல்லாவது  பெயரும்  வினையும்  போலத் தனித்தனி  பொருளுணர
உச்சரிக்கப்படாது; பெயர் வினைகளைச் சார்ந்து புலப்படும். எ-று


1. ‘இடைச்   சொல்லும்  உரிச்சொல்லும்  பெயர்  வினையிடமாகத்
தோன்றும்’    என்பது    இச்சூத்திரப்   பொருள்.   இதனைப்
‘பெயர்ச்சொல்   இடமாக   இடைச்சொல்லும்    வினைச்சொல்
இடமாக   உரிச்சொல்லும்   தோன்றும்’    எனவும்   பொருள்
கொள்ளலாம். அப்படியானால் இடைச்சொல்  பெயரிடமாகத்தான்
தோன்றும்  என்பதுபடும்.   வினைச்சொல்இடமாகத்  தோன்றாது
என்றாகிவிடும். அதனால் இரண்டிடமாகவும் தோன்றும்  என்பது
இங்குச் சொல்லவேண்டுவதாயிற்று.    உரிச்  சொல் இரண்டையும்
சார்ந்து   வரும்  என்பதைப்  பெயரினும் வினை  மெய்தடுமாறி
வரும் என்றார்.