பெயரும் வினையும் இடமாக நின்று பொருள் உணர்த்துதலின் இடைச்சொல்லாயிற்று. மேற்பெயரியலுள்ளும் ‘அவற்று வழி மருங்கிற் றோன்றும் (பெய.5) என ஓதி, ஈண்டும் இவ்வாறு கூறுதல், கூறியது கூறலாம் பிறவெனின், ஆண்டுத் 1 தோற்றுவாய் செய்தார் ஈண்டு 2 இலக்கணம் கூறினார் என்க. 3பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும்’ என்றதனால், பொருள் உணர்த்தும் வழிப் பெயர்ப் பொருண்மையுணர்த்தியும், வினைப் பொருண்மையுணர்த்தியும் வருவதல்லது வேறு பொருள் இலது என்றுமாம். நச்சினார்க்கினியர். இச்சூத்திரம் இடைச்சொற்கெல்லாம் பொது இலக்கணம் கூறுகின்றது. இ-ள் : இடை எனப்படுப-இடைச்சொல் என்று சொல்லப்படுவன, பெயரொடும் வினையொடும் நடைபெற்றியம்-பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்து நின்று அவற்றையே வெளிப்படுத்துநடக்கும், தமக்கு இயல்புஇல-தமக்கென வேறோர் பொருளை உணர்த்தும் இலக்கணமுடைய வல்ல, எ-று. முன்னும் பின்னும் நிற்குமேனும் பெரும்பான்மையும் இடையே நிற்றலின் இடைச்சொல் என்றார். உ-ம் : ‘அதுகொல்தோழி காமநோயே’ (குறுந் 5) ‘வருக தில்லம்ம வெஞ்சேரி சேர’ (அகம்.276) எனப் பெயரும் வினையும் சார்ந்து நின்று அவற்றின் பொருளை விளக்கின. தமக்கு இயல்பில் எனப் பொதுப்படக் கூறியவதனால் சாரப்படும் சொல்லின் வேறாய் நிற்றலேயன்றி, உண்டான், என்றிசினோரே, அருங்குறைத்து என்பனவற்றிற்கு உறுப்பாய் வருதலுங் கொள்க.
1. தோற்றுவாய் செய்ததாவது ‘இடைச்சொல் பெயர் வினைவழி வரும்’ எனக் கூறியது. 2. இலக்கணம் கூறியதாவது ‘இடைச்சொல் பெயர் வினையைச் சார்ந்து தனக்கெனப் பொருளின்றி வரும்’ என்றது. 3. இப்பொருள் சேனாவரையர் கொண்டது. இதனையும் இவர் உடன்பட்டார். |