கல்லாடனார். இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இடைச்சொற்கு எல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல்நுதலிற்று. இ-ள் : இடைச்சொல் என்று சொல்லப்படுவன பெயர்ச் சொல்லோடும் வினைச்சொல்லோடும் வழக்குப் பெற்று நடக்கும்; அவ்வாறு அவற்றோடு நடத்தலல்லது தாமாக நடக்கும் இயல்பில, எ-று உ-ம் : அதுமன், வருகதில் அம்ம எனவரும். ‘தமக்கியல்பில’ என்றதனான் பெயரோடும் வினையோடும் அவ்விடைச் சொற்கள் வருவழிச் சொற்புறத்து வழி வருதலும் அச்சொல்வழி வருதலும் என இருவகைத்து என்பது பெறப்பட்டது. உ-ம் : வருகதில், உண்டான் எனவரும். இவை வினை. அதுமன், மற்றையது எனவரும். இவை பெயர். மற்று இச்சூத்திரத்தின் பொருண்மையும் இலேசின் பொருண்மையும் ‘இடைச்சொற்கிளவியும் உரிச்சொற் கிளவியும்’ என்ற சூத்திரத்துள்ளும் அதன் இலேசினுள்ளும் அடங்குமால் எனின், அது நிரல்நிறை வாய்பாட்டதாக பாற் பெயரெனப்பட்டு வரும் என்றும் வினையொடு உரிவரும் என்றும்கொள்ளக்கிடந்தமையின், இடையும் ,இரண்டொடும் வரும் என்றற்குக் கூறினார் என்பது. இனி அவ்விலேசு நிரனிறைச் சூத்திரத்த தாகலாற் புறத்து வழி வருதல் இடைச்சொற்காகவும் உள்வழி வருதல் உரிச் சொற்காகவும் கொள்ளக் கிடக்கும் என்பது கருதி, ஈண்டும் இருவகையானும் இடைவரும் என்பதற்கு இலேசு கூறினார் போலும். வெள்ளை வாரணனார். இஃது இடைச்சொற்கெல்லாம் பொதுவிலக்கணம் கூறுகின்றது. இ-ள் : இடைச்சொல் என்று சொல்லப்படுவன பெயரொடும் வினையொடும் வழக்கிற் பொருந்தி நடக்கும்; தாமாக நடக்கும் இயல்பு இல. எ-று |