பெயரொடும் வினையொடும் என்றது ‘வழிமொழிதல்’ அவற்றுவழி மருங்கிற்றோன்றும் என்ப (பெயரியல் - 5) என்றதனான் இக்கருத்துப் பெறப்படுமாயின் அவற்றொடு ஒருங்கு வரும் என்பதும் ஈற்றினும் இடையினும் அவற்றிற்கு உறுப்பாக வருமென்பதும் பெறப்பட வைத்தல் இதன் பயனாகும். அன்றியும் அச்சூத்திரம் இடைச்சொல் பெயரொடும் உரிச் சொல் வினையொடும் வரும் என நிரனிறையாகப் பொருள் கோடற்கும் ஏற்பநிற்றலான் அதன் பொருள் புலப்பட ஈண்டு விதந்தோதினார் என்க. அன்றியும் இடைச் சொற்களின் தலையாய இலக்கணமாகிய “தாமாக நடக்கும் இயல்பில” என்பதற்குப் “பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும்” என்பது அவாய் நிலையாக நிற்றலின் இங்ஙனம் கூறுதல் கடப்பாடாதலையும் அறிக: எ.டு ; - அது கொல் தோழி காமநோயே - கொன்னே கழிந்தன்றிளமை என இவை பெயரொடும் வினையொடும் சார்ந்து வந்தன. மலையன், உண்டான், கரியன் என இவை அவற்றிற்கு உறுப்பாய் வந்தன பிறவும் அன்ன, இடைச் சொற் பாகுபாடு |