சொல்லதிகாரம் - இடையியல்19

வேற்றுமைப்  பொருள்வயின் உருபாவன; ஐ,  ஓடு,  கு, இன், அது,
கண், விளி (வேற். 3) என்னுந் தொடக்கத்தன.

அசைநிலைக் கிளவி ;   கேண்மியா,   கண்டிகும்   (புறம்.  251)
என்னுந் தொடக்கத்தன.

1 மற்றையன முன்னே விரிக்கின்றார்.

சேனா.

இ-ள் ;  மேற் சொல்லப்பட்ட  இடைச்  சொற்கள்  தாம்,  இரண்டு
சொற்   புணருமிடத்து  அப்பொருள்   நிலைக்குதவுவனவும்,  வினைச்
சொல்லை முடிக்கு மிடத்துக் காலப் பொருளவாய் வருவனவும்,செயப்படு
பொருள்    முதலாகிய   வேற்றுமைப்  பொருட்கண்  உருபு  என்னும்
குறியவாய்     வருவனவும்,     பொருளுடையனவன்றிச்    சார்த்திச்
சொல்லப்படுந்   துணையாய்  வருவனவும்,  வேறு  பொருளுணர்த்தாது
இசை    நிறைத்தலே   பொருளாக   வருவனவும்,  தத்தம்  குறிப்பிற்
பொருளுணர்த்துவனவும்,  ஒப்புமை  தோன்றாதவழி  அவ்வொப்புமைப்
பொருள்    பயப்பனவும்     எனக்    கூறப்பட்ட     ஏழியல்புடைய
சொல்லுமிடத்து, எ-று.

புணரியல்நிலை - புணரியலது  நிலை.  ஆண்டுப்பொருள் நிலைக்கு
உதவுதலாவது,    ‘எல்லாவற்றையும்’    என்புழி    வற்றுச்   சாரியை
நிலைமொழிப் பொருள் அஃறிணைப் பொருள் என்பது  பட வருதலும்,
எல்லா  நம்மையும் எண்புழி நம்முச்  சாரியை  அப்பொருள் தன்மைப்
பன்மையென்பது   படவருதலுமாம்.   அல்லனவும் தாம் சார்ந்து வரும்
மொழிப்   பொருட்கு   உபகார   முடையவாய்   வருமாறு    ஓர்ந்து
கொள்ளப்படும். அல்லாக்கால் சாரியை மொழியாகா வென்பது.

வினைச்சொல்  ஒரு  சொல்லாயினும்   முதல்   நிலையும்   இறுதி
நிலையும்    இடைச்சொல்லுமாகப்    பிரித்துச்    செய்கை    செய்து
காட்டப்படுதலின்,       ‘வினைசெயல்     மருங்கின்’      என்றார்.
அம்முடிபுணர்த்தாமைக்குக்  காரணம்  ‘புணரியல்   நிலையிடையுணரத்
தோன்றா  (எழு.  குற்றி  -77) என்புழிச் சொல்லப்பட்டது.   அவற்றுள்
ஒரு     சாரன   2 பாலுணர்த்தாமையானும்’    3 எல்லாங்    காலம்
உணர்த்துதலானும் ‘காலமொடு வருநவும்’ என்றார்.


1. மற்றையன;   இசைநிறை,  குறிப்பிற் பொருள்  செய்குந, ஒப்பில்
வழியாற் பொருள் செய்குந.

2. பால்   உணர்த்தாதன;  வியங்கோள்,  வேறு, இல்லை,  உண்டு,
பெயரெச்சம், வினையெச்சம் முதலியனவற்றின் விகுதிகள்,,

3. எல்லாம்     காலம்     உணர்த்தலாவது    வெளிப்படையாக
இடைநிலைகள் காலம் உணர்த்தல்.