வேற்றுமைப் பொருளவாய் வருவன பிற சொல்லும் உளவாகலின் அவற்றை நீக்குதற்கு உருபாகுநவும்’ என்றார். பிற சொல்லாவன 1 ‘கண்ணகன் ஞாலம், ‘ஊர்க்கால் நிவந்த பொதும்பர்’ (குறிஞ்சிக்கலி 20) என ஏழாம் வேற்றுமைப் பொருட்கண் வரும் கண் கால் முதலாயினவும்,’அனையயாகல் மாறே’ (புறம். 4) ‘இறந்தோன் பெயரன் பிறந்தமாறே’, ‘இயலபுளிக் கோலோச்சு மன்னவன்’ (குறள். 545) என மூன்றாம் வேற்றுமைப் பொருட்கண்வரும் மாறு, உளி என்பனவும், அன்னபிறவும் ஆம். அஃதேல், வேற்றுமையுருபும் என்று ஓதுவார்; ஓதவே 2 இவை நீங்கும் எனின், அஃதொக்கும், அவைதம்மையும் தழீஇக் கோடற்கு, வேற்றுமைக் பொருள்வயின்’ என்றார். 3 அவை வருங்கால் நிலைமொழியுருபிற்கேற்ற செய்கை ஏற்புழிப்பெறுதலுடைமையின்’ உருபாகுநவும்’ என்றார். 4 இஃது இருபொருள் உணர்த்தலான் இருதொடராகக் கொள்க.
1. கண்ணகல் ஞாலம் - இடமகன்ற உலகம், ஊர்க்கால் நிவந்த பொதும்பர் - ஊரில் உயர்ந்தெழுந்த சோலை, அனையை யாகல் மாறு-அன்னையை ஆகலான், சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே - பெயரன் பிறந்ததால் சிறந்தோன், இயல்புளிக் கோலோச்சு மன்னவன். முறையால் கோல் ஓச்சும் மன்னவன். 2. இவை - கண் கால் முதலியன. 3. நிலைமொழி உருபிற்கேற்ற செய்கை பெறுதலாவது; நீ+கண் > நின் கண் என நீ என்பது கண் உருபுடன் புணரும் போது நின் என்றாவது போலவே கண் உருபின் பொருள்பட வரும் உழை என்பதுடன் சேரும் போதும் நீ + உழை > நின் +உழை என நின் என்றாகும். இதனால் உருபின் பொருள் பட வரும் கால் முதலிய சொற்களையும் உருபு என்றார். 4. இருபொருள் உணர்த்துமாறு; வேற்றுமைப் பொருள் வயின் உருபாகுந-- (1) வேற்றுமைப் பொருளிடத்து உருபாகி வருவன அவை ஐ, ஆல் முதலியன. (2) வேற்றுமைப் பொருளிடத்து உருபாக (உருபின் பொருளாக) வருவன, அவை ஏழாம் வேற்றுமையுருபாகிய கண் என்பதன் இடப் பொருளாக வரும் கால், உழை முதலியன, |